திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை முடிந்து மகாமாரியம்மன் உற்சவமூர்த்தி கோயிலுக்குள் உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறாள். பிரதோஷத்தன்று நந்தியெம்பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், கிருத்திகை நாளில் பாலமுருகனுக்கு விசேஷ வழிபாடுகளும் செய்யப்படுகிறது. சித்திரை மாதம் வளர்பிறையில் அம்மனுக்கு பூச்சாட்டு தொடங்கி அக்னி கம்பம் நடுதல், பவானி ஆற்றங்கரையிலிருந்து அம்மனை அழைத்து வருதல், பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்தல் என வரிசையாக ஒவ்வொரு வைபவமும் சிறப்பாக நடைபெறுகிறது. அதனையடுத்து மகாமாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளி, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக இரவு முழுவதும் பவனி வந்து அருளாசி தந்துவிட்டு விடியற்காலை கோயில் திரும்புகிறாள். ஆடிமாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மூன்றாவது ஆடிவெள்ளியன்று திருவிளக்கு பூஜையை வெகுவிமரிசையாக நடத்துகின்றனர்.
தல சிறப்பு:
மூலவர் அம்மனுக்கு முன்பாக சுயம்பு வடிவிலும் அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். (வெள்ளிக்கிழமைகளில் காலை 6 இரவு 8.30)
முகவரி:
அருள்மிகு பேட்டை மகா மாரியம்மன் திருக்கோயில்,
எல்.எஸ.புரம்
மேட்டுப்பாளையம் 641301
கோயம்புத்தூர்.
போன்:
+91 9943937769
பொது தகவல்:
மகிமை நிறைந்த மகாமாரி கோயிலைப் புதுப்பித்து சில மாதங்களுக்கு முன்பு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். கிழக்கு நோக்கிய கோயிலின் நுழைவுவாயிலில் தீபஸ்தம்பமும், அதனையடுத்து உடுக்கையுடன் கூடிய சூலாயுதம், பலிபீடம், சிம்மவாகனம் அமைந்துள்ளன. முன்மண்டபத்தில் இருபுறமும் சுதை வடிவில் துவாரசக்திகள் நின்ற நிலையில் காட்சி தருகின்றன. அர்த்தமண்டபத்தில் விநாயகர் வீற்றிருக்க, மகாமாரி உற்சவமூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். கருவறையில் மகாமாரியம்மன் அமர்ந்த நிலையில் நான்கு திருக்கரங்களில் வலது மேல் கையில் சூலாயுதம், கீழ் கையில் கத்தி, இடது மேல் கையில் நாக சர்ப்பம், கீழ்க் கையில் குங்குமச்சிமிழ் ஆகியவற்றைத் தாங்கி அருட்காட்சியளிக்கிறாள். வெளிப்பிராகாரத்தில் குபேரவிநாயகர், சிவன், நந்தி, பாலமுருகன், நவநாயகர்களின் தரிசனம் தருகின்றனர்.
பிரார்த்தனை
இந்த அம்மனை வழிபடுவதால் அம்மை நோய் குணமாவது, மட்டுமின்றி அமோக பலன்கள் தருவதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் திருவிழாவின்போது தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
தன்னை வணங்குபவர்களை நோய், நொடியிலிருந்து காக்கிறாள் அன்னை. இங்கு தரப்படும் அம்மன் தீர்த்தத்தை அம்மை நோய் பாதித்தவர்கள் மேல் தெளித்தால், ஐந்து நாளில் நோய் முழுவதும் நீங்கிவிடும். இந்த அம்பிகையின் ஆற்றலால் நடந்த அற்புதங்கள் பல. சுமார் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலின் தலைமைப் பூசாரியின் நான்கு வயது மகனுக்கு பெரியம்மை நோய் தாக்கி அவதிப்பட, மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டனர். பின்னர் கோயிலுக்கு முன்பு தொட்டில் கட்டி அதில் மகனை படுக்க வைத்துவிட்டு, ஆத்தா மகாமாரி. நீதான் எம்புள்ளைய காப்பாத்தணும் என்று உருகி வேண்டிக்கொள்ள, அம்மன் அருளால் அவன் பூரணகுணமடைந்தனர். இப்போது எழுபது வயதை எட்டிய அவரே இத்தலத்தில் அம்மனுக்கு பூஜை செய்து வருகிறார்.
தல வரலாறு:
பூவுலகில் அனைத்து உயிர்களுக்கும் வரமளித்துக் காத்தருளும் அன்னை, பேட்டை மகாமாரியம்மன் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம், மேட்டுப்பாளையம். சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலத்திலிருந்து புன்செய்ப்புளியம்பட்டி, இரும்பறை, சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு வாரந்தோறும் மாட்டு வண்டிகளில் காய்கறிகள் வருவது வழக்கம். ஒருநாள் வழியில் சற்று ஓய்வெடுத்துவிட்டு வியாபாரிகள் புறப்படும் சமயம் தன் வண்டியில் காய்கறிக்கூடைகளுக்கு அருகே எலுமிச்சை, மல்லிகைப்பூ, நீளமான கல் ஆகியவை இருப்பதைக் கண்ட வண்டிக்காரர் ஒருவர், மற்றவர்களுக்கு அதைக் காட்டினார். இவை வண்டியில் எப்படி வந்தன எனப் புரியாமல் அனைவரும் குழம்ப, அவற்றை எடுத்து கீழே வைத்து விட்டார் வண்டிக்காரர். பின்னர் அனைவரும் வண்டியில் மாட்டைப் பூட்டிக் கிளம்ப, அவர் வண்டியின் மாடுகளால் ஒரு அடிகூட நகரமுடியவில்லை. பயந்துபோன அவர்கள் கீழே வைத்த எலுமிச்சை, மல்லிகைப்பூ, நீளமான கல் ஆகியவற்றை எடுத்து மீண்டும் அதே வண்டியில் வைக்க, இப்போது மாடுகள் நகர்ந்தன. காய்கறிக்கூடைகளை சந்தையில் இறக்கிவிட்டு, மாடுகளை வண்டியிலிருந்து அவிழ்த்துக் கட்டிவிட்டு, எலுமிச்சை, மல்லிகைப்பூ, நீளமான கல் ஆகியவற்றை அருகிலிருந்த வேப்பமரத்தடியில் வைத்து, தெய்வமே தவறு ஏதேனும் இருந்தால் என்னை மன்னித்து விடு என கையெடுத்துக் கும்பிட்டார். அப்போது இந்த வேப்பிலைக்காரியை சரியான இடத்தில்தான் அமர்த்தியுள்ளாய். நான் மகாமாரியாக இங்கு வீற்றிருந்து அருள்பாலிப்பேன் என அசரீரி வாக்கு கேட்க, அந்த இடத்தை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார். விஷயம் ஊர் மக்களுக்கு தெரியவர, பச்சைப் பந்தல் போட்டு அம்பிகையை வணங்கிவந்தனர். இப்படியே பல ஆண்டுகள் கடந்த நிலையில் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியைச் சேர்ந்த பெரியவர் ஒருவரின் கனவில் சிறுமி உருவில் தோன்றிய அம்மன், இன்னும் எத்தனை காலம்தான் என்னை இப்படியே வழிபடுவீர்கள் உங்களுக்கு என்ன குறை வைத்தேன் எனக்கு ஒரு கோயில் கட்ட முடியாதா எனக் கேட்டாள். கனவில் அம்மன் வந்த விஷயத்தை பெரியவர் காலையில் அனைவரிடமும் சொல்ல, ஊர் மக்கள் கோயிலை விரைவில் கட்டி, அம்மனுக்கு சிலை வடித்து, கருவறையில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். தெய்வாம்சம் பொருந்திய அந்த நீளமான கல்லை அம்மனுக்கு முன்பு வைத்து, ஆதிமூலவராக இன்றும் வழிபடுகின்றனர். சிலாரூபத்தில் இருக்கும் மூலவர் பேட்டை மகாமாரியம்மன் என்ற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். கோயில் அமைந்துள்ள இடம் அக்காலத்தில் மாட்டு வண்டிப்பேட்டையாக இருந்ததால் அம்மன் திருநாமத்தின் முன்பு பேட்டை என்ற வார்த்தையும் சேர்ந்துகொண்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவர் அம்மனுக்கு முன்பாக சுயம்பு வடிவிலும் அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு.
இருப்பிடம் : கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ. தூரம் ஊட்டி செல்லும் சாலையில் நடந்தால் எல்.எஸ்.புரம். அங்கு இக்கோயில் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது.