தினந்தோறும் மூன்று காலபூஜை நடைபெறுகிறது. காலை 7.30 -8 மணிக்குள் பாலபிஷேகம், மதியம் அவல், சர்க்கரை படைத்து தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. மாலை சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் இறைவனுக்கு மதியம் பன்னிரண்டு மணிக்கு பூஜைகள் தொடங்குகின்றன. அன்றைய தினம் பக்திப் பாடல்களால் மாதேஸ்வரரை ஆராதிக்கின்றனர். பின்னர் நடைபெறும் பக்தி சொற்பொழிவு இளையதலைமுறையினருக்கு ஆன்மிகத்தின் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ள மலைப்பாதை பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, தேய்பிறை அஷ்டமி ஆகிய விரத தினங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றது. மாசி மகத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. தைத் திருநாளில் இப்பகுதி மக்கள் மாதேஸ்வரருக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். மகாசிவராத்திரியன்று காலை முதல் மறுநாள் விடியற்காலை வரை விசேஷ வழிபாடுகள் நடைபெறுகிறது. இரவு முழுவதும் பஜனை, சொற்பொழிவு தொடரும் இப்பகுதியைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தப் பெருவிழாவில் கலந்து கொள்வர்.
தல சிறப்பு:
கோயில் சிறு குன்றின் மீது அமர்ந்திருப்பதும், பக்தர்கள் கிரிவலம் வருவதும் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை (முக்கிய விரத தினங்களில் காலை 6 முதல் இரவு 8 வரை )திறந்திருக்கும்.
தோரணவாயிலில் நுழைந்ததும் வரசித்தி விநாயகர் காட்சி தருகிறார். குன்றின் மீது ஏறினால் பெரிய அரசமரத்தடியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் நாகர் திருமேனிகளுக்கு இடையில் விநாயகர் அருள்கிறார். அதனையடுத்து கிழக்கு நோக்கிய கோயில். எதிரே நெடிய தீபஸ்தம்பம், பலிபீடத்தைத் தொடர்ந்து நந்தியம்பெருமான் காட்சி தருகிறார்.
மகா மண்டபத்திலும் நந்தி, பலிபீடம் உள்ளது. இங்கு விநாயகர், பாலமுருகன் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆகியோர் தனித் தனி சன்னிதிகளில் அருள்கின்றனர். கருவறையில் எம்பெருமான் ஈசன் லிங்கத்திருமேனியராக அமைந்து தன்னை வேண்டிடும் பக்தர்களின் மனக்குறையைத் தீர்த்து நல்வரத்தை தந்திடுகிறார். வெளி பிராகாரத்தில் கன்னிமூல கணபதி, முருகர், சண்டிகேஸ்வரர், காலபைரவர் தனித்தனி சன்னிதிகளில் குடிகொண்டுள்ளனர். அருகே நவகிரகங்களும் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கையும் அருள்புரிகின்றனர்.
பிரார்த்தனை
இங்கு முக்கிய பிரார்த்தனையாக திருமணதடையுள்ளவர்கள் வந்து அதிகமானோர் பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றப்படுகிறது.
தலபெருமை:
பிரதோஷ தினத்தன்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நந்தியம் பெருமானுக்கும், எம்பெருமான் மாதேஸ்வரருக்கும் விசேஷ அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. இந்தத் தருணத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் கோரிக்கையை எம்பெருமானிடம் வைக்கின்றனர். அவர்கள் வைத்த கோரிக்கை எதுவுமே இதுவரை நிறைவேறாமல் இருந்ததில்லை. என்கின்றனர் பக்தர்கள். இங்கு பிரதோஷ கிரிவலம் சென்றால் தீமைகள் நீங்கி, நன்மைகள் வந்து சேரும் என பலன் பெற்றோர் சொல்கின்றனர். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை ஐந்து மணிக்கே பூஜைகள் முடித்து திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி பக்தர்கள் கிரிவலம் வருவது கண்கொள்ளாக்காட்சி.
ஆனித் திருமஞ்சனத்தின் போது உற்சவ மூர்த்திகளான நடராஜர், சிவகாமியம்மை ஆகியோருக்கு காலை 9 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் பங்குபெறும் திருமணத்தடையுள்ளவர்களுக்கு திருமணம் விரைந்து கைகூடும் என்பது நம்பிக்கை. சிறுமுகையில் உள்ள கோதண்டராமரின் உற்சவ மூர்த்தங்கள், அனுமன் ஜெயந்தியன்று, இடுகம் பாளையத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கும், ஸ்ரீராமநவமியன்று இடுகம்பாளையம் ஆஞ்சநேயர், சிறுமுகை கோதண்டராமர் கோயிலுக்கும் செல்வதான உற்சவங்கள், ஆண்டுதோறும் இத்தலத்தின் வழியாகவே நடக்கிறது. அந்த சமயத்தில் ராமரும் அனுமனும் மாதேஸ்வரர் கோயில் அடி வாரத்தில் பக்தர்களால் வரவேற்று அளிக்கப்படும். ஆராதனையை ஏற்றுக்கொண்டு செல்வது சிவ விஷ்ணு சங்கமாகக் கிடைக்கும் அரிய காட்சியாகும்.
தல வரலாறு:
பக்தர்களின் குறைகளைத் தீர்க்க மாதேஸ்வரர் என்ற பெயரில் குன்றின் மீது ஈசன் கோயில் கொண்டருளும் தலம், அன்னதாசம்பாளையும். பவானி நதி கரைபுரண்டு ஓட, விவசாயம் செழிக்க இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாய் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த காலம் அது. அவர்களுள் சிவபக்தர்கள் சிலர் விசேஷ நாட்களில் வண்டி கட்டிக்கொண்டு காரமடை, பவானிசாகர் ஆகிய ஊர்களில் உள்ள சிவன்கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு வந்தனர்.
நாட்கள் செல்ல செல்ல வயதான காலத்தில் தொலைவில் உள்ள சிவன்கோயிலிற்கு தங்களால் செல்லமுடியாது என்பதை உணர்ந்து, உடம்பில் தெம்பும், தைரியமும் உள்ளபோதே நம் கிராமத்திலேயே ஒரு சிவன்கோயிலை அமைத்துவிட வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி ஊரின் எல்லையை ஒட்டியுள்ள அழகிய சிறு குன்றின் மீது கோயில் எழுப்பி, நல்லதொரு நாளில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து இறைவனுக்கு மாதேஸ்வரர் என்ற திருநாமத்தை சூட்டி குடமுழுக்கு நடத்தினர். வழிபாடுகள் பெருக பெருக மக்களின் வாழ்வும் சிறக்க நாளடைவில் கருவறை, அர்த்த மண்டபம் மகாமண்டபம் என கோயில் விரிவடைந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கோயில் சிறு குன்றின் மீது அமர்ந்திருப்பதும், பக்தர்கள் கிரிவலம் வருவதும் சிறப்பு.
இருப்பிடம் : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் -பெத்திக்குட்டை சாலையில், சிறுமுகையை அடுத்து 1 கி.மீ. தொலைவில் ரேயான் நகர் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், கோயில் அடிவாரம்தான்.