செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் உண்டு. இத்தலத்தின் வருட வைபவம் சித்ரா பவுர்ணமி. அன்றையதினம் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
தல சிறப்பு:
கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 11மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மதிப்பநல்லூர் அம்மன் திருக்கோயில்,
வடவள்ளி,
கோயம்புத்தூர்.
போன்:
+91 9486173108
பொது தகவல்:
முன் மண்டபத்தில் சூலமும் அம்மனின் சிம்ம வாகனமும் உள்ளன. மகா மண்டப நுழைவு வாயிலின் இருபுறமும் நாகலிங்கேஸ்வரர், அம்மன், நாகர் சிலைகள் உள்ளன. முன் மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் வேப்பமரத்தின் கீழ் கிருஷ்ண தேவராயர் தமது மனைவியுடன் உள்ள சிலை காணப்படுகிறது. மகா மண்டபத்தில் விநாயகரும், காளியும் அருள்பாலிக்கின்றனர். திருமலை நாயக்கர் தமது இரு மனைவியருடனும் சேடிப்பெண்ணுடனும் இருப்பதுபோன்ற சிலையும் இம்மண்டபத்தில் காணப்படுகிறது. உற்சவர் அறையில் மிகத் தொன்மை வாய்ந்த அம்மன், விநாயகர் விக்ரகங்கள் உள்ளன.
பிரார்த்தனை
தோஷங்கள். வழக்குகள். திருமணத்தடை, குழந்தை பாக்யம் இன்மை, உடல் நலக் குறைவு ஆகியவை நீங்கிட பவுர்ணமி நாளில் ஸ்ரீசக்கரத்தின் மீது தங்கள் ஜாதகத்தை வைத்து, மூல மந்திரம் ஜபித்து வழிபாடு செய்கிறார்கள் பக்தர்கள்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகிறார்கள்.
தலபெருமை:
அம்மனின் முகம் சற்றே ஈசானியத்தை நோக்கி திரும்பிய வண்ணம் உள்ளது. பீடத்தில் மகிஷாசுரவதம் காட்சி இடம் பெற்றுள்ளது. மூக்குத்தி அணிவிப்பதற்காக மூக்கில் ஒரு சிறிய துவாரம் அமைத்துள்ளதை அபிஷேகத்தின் போது காண இயலும். அம்மனுக்கு முன்பாக ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அபிஷேகம் ஆராதனை போன்றவை சக்கரத்திற்குச் செய்த பிறகே அம்மனுக்கு செய்யப்படுகிறது. தல விருட்சம் ஏழிலை பாகை மரம். ஒரு மடலில் ஏழு இலைகள் இருக்கும்.
தல வரலாறு:
மேலைச் சிதம்பரம் என அழைக்கப்படும் பேரூர் கோயிலில் உள்ள கனகசபை, 17-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரால் கட்டப் பெற்றது. அச்சபையில் உள்ள தூண் சிற்பங்களுக்குத் தேவையான கற்கள் மருதமலையிலிருந்து வெட்டி எடுத்து வரப்பட்டு, பேரூருக்கு வடக்கே உள்ள ஓர் ஊரில் வைத்து சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. பேரூரைச் சேர்ந்தவர்கள் அவ்வூரை வடக்கு வழி என அழைத்தனர். அதுவே காலப்போக்கில் வடவழி என மருவி, பேச்சு வழக்கில் வடவள்ளி ஆகிவிட்டது. இவ்வூரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அம்மனின் பெயர் சற்று வித்தியாசமானது.
மதிப்பநல்லூர் அம்மன் என்றழைக்கப்படும் அந்த தேவியின் பெயருக்குக் காரணம், ராமேஸ்வரம் அருகில் உள்ள மதிப்பநல்லூர் எனும் ஊரில் உள்ள அம்மன் கோயிலிருந்து பிடிமண் எடுத்து வந்து இங்கு கோயில் எழுப்பியதால் அம்மனும் மதிப்பநல்லூர் அம்மன் என்றே அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அர்த்த மண்டபத்தை அடுத்த கருவறையில் உள்ள மதிப்பநல்லூர் அம்மன் ஆறடி உயர சிலா ரூபிணியாக தரிசனம் அளிக்கிறாள். இச்சிலை கோயில் வளாகத்திலேயே வடிக்கப்பட்டது என்ற சிறப்பினை உடையது. நின்ற கோலத்தில் வலக் கரங்களில் குழந்தை தலை, வாள், உடுக்கை சூலாயுதம், இடக்கரங்களில் கடாயுதம், அக்னி, மணி, அட்சய பாத்திரம் ஏந்தி அஷ்ட புஜங்களுடன் சாந்த சொரூபிணியாக விளங்குகிறாள் அம்பிகை.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு.
இருப்பிடம் : கோவை - மருதமலை சாலையில், வடவள்ளி பஸ் நிலையத்திற்கு வெகு அருகே இத்தலம் அமைந்துள்ளது. கோவை ரயில் நிலையத்திலிருந்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை 1சி பஸ் உள்ளது. இந்த பஸ் மூலம் கோயிலை அடையலாம்.