சித்திரை முதல் நாள் மற்றும் ஆடி வெள்ளிக்கிழமைகள் இத்தலத்தின் வருடாந்தர திருவிழாக்கள் ஆகும் அன்று அம்மனுக்கு உகந்த கூழ் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சிவாகம முறைப்படி தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜையும், பவுர்ணமி தின பூஜை சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்று வருகின்றன.
தல சிறப்பு:
இங்கு அம்மன் சுயம்புவாக வீற்றிருக்கிறாள்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். (செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7- இரவு 8)
அம்மனுக்கென தனியே நிரந்தரமாக கருவறையுடன் கூடிய மண்டபத்தை உருவாக்க எண்ணி திட்டமிட்டனர். அனைவரது பங்களிப்புடன் ஒரு சிறிய அளவில் விமானத்துடன் கூடிய கருவறை மற்றும் சிமெண்ட் சீட் வேயப்பட்ட முன் மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தில் நந்திதேவர், பலிபீடம், சூலம் ஆகியவை நிறுவப்பட்டு 2.6.16 அன்று வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடந்தேறியது.
பிரார்த்தனை
அம்மனை வேண்டித் துதித்த பக்தர்கள் பலர் தொலைந்த பணம் திரும்பக் கிடைத்தாகவும், வீடு, மனை, யோகம் வந்ததாகவும், வெளிநாட்டில் வேலை கிடைத்தாகவும், திருமணம் மற்றும் குழந்தைப்பேறு கிட்டியதாகவும் சொல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கருவறை விமானத்தில் வடக்கு நோக்கி சூலத்தம்மன், கிழக்கு நோக்கி மாரியம்மன், தெற்கு நோக்கி விஷ்ணு சக்தி, மேற்கு நோக்கி சிவசக்தி ஆகியோர் சுதை வடிவில் அமைந்து மூன்று கலசங்களுடன் காட்சி தருவது சிறப்பு. கோயில் நடை சாற்றி இருக்கும் நேரத்தில் அம்மனை பகலில் எந்நேரமும் தரிசிக்க ஏதுவாக இரும்பு கிரில் கதவு அமைக்கப்பட்டுள்ளது. இது மிகச் சிறய கோயிலாக இருந்தாலும், தன்னை நாடி வந்து சரணடைந்த பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தி வருவதை கண்கூடாக காண முடிகிறது. வெளியூர் செல்பவர்கள், புறப்படும் முன் அம்மன் சன்னிதியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றால் பயணம் இனிதாக எந்த ஒரு அசம்பாவிதமும் விபத்துமின்றி அமைவதாக சொல்கின்றனர்.
தல வரலாறு:
முந்நூறு ஆண்டுகளுக்கு, முற்பட்ட தொன்மையான அம்மன், பூமியிலிருந்து வெளிப்பட்டு தற்போது புதிய கோயில் கொண்டு வீற்றிருக்கிறார். கோவை மேட்டுப்பாளையம் சாலையின் அருகே உள்ள தொப்பம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி நகரில் அருளாட்சி புரிகின்றார். இவரது வரலாறு சற்று வித்தியாசமானது. விவசாயம் ஒன்றையே தொழிலாகக் கொண்ட விஜயன் என்பவர் தன்னிடமிருந்த சொற்ப தொகையுடன் நண்பர் மற்றும் உறவினர்களிடம் பணத்தைக் கடனாகப் பெற்று சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் தொப்பம்பட்டியில் ஒரு விவசாய பூமியை வாங்கினார். இப்பூமியை வாங்கும்போது பூமியின் கிழக்கு பகுதியின் எல்லையில் உள்ள வரப்பில், வேப்பமரத்தின் அடியில் ஓர் அம்மன் சிலை இருந்தது. பூமியை விற்கும் போதே, வாங்குபவரிடம் இந்த சிறியக் கோயில் இருப்பதைப் பற்றியும், மூன்று தலைமுறைகளுக்கு மேல் தவறாமல் பூஜை செய்து வந்ததாகவும், சக்தி வாய்ந்த வரப்பிரசாதியான அம்மன் என்ற விபரங்களையும் சொல்லி உள்ளார் விஜயன்.
வாங்கியவரும் பூமியைத் தன் பெயருக்கு மாற்றிய நாளிலிருந்து தினமும் காலையில் அம்மனுக்கு நீரால் அபிஷேகம் செய்து, தீபமேற்றி மலர்களை சாற்றி பூஜை செய்து, அம்மனை பூஜித்து வந்தார். நிலப்பரப்பை சமன் செய்து அதில் தான் வாங்கிய நிலத்தில் தென்னங்கன்றுகளை நட்டு பராமரித்ததோடு, ஊடே மற்ற பயிர் வகைகளையும் விளைவித்து வந்தார். காலப்போக்கில் இவரது பங்காளி குடியிருப்பு காலனி உருவாக்குவதற்காக ஒரு ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு விற்றுவிட்டார். பூமியை மட்டம் செய்து வீட்டுமனைகளாகப் பிரித்து அதற்கு ராஜராஜேஸ்வரி நகர் எனப் பெயரிட்டு வீட்டுமனைகளை விற்று விட்டார். மனைகளை வாங்கியவர்கள் மளமளவென வீடுகளைக் கட்டினர். விளைநிலங்கள் வீட்டுமனைகளாகி, வீடுகள் முளைத்து மக்கள் குடியேறினர். இங்குள்ள மக்களுக்கு அருகில் எந்த அம்மன் கோயிலும் இல்லை. இக்குடியிருப்பில் இருந்த பெண்கள் தென்னந்தோப்பில் உள்ள அம்மன் கோயிலைப் பற்றி கேள்விப்பட்டு, தினசரி இந்த அம்மனுக்கு தீபமேற்றி, மலர்மாலைகள் அணிவித்து தொழுது வந்தனர். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பால் அபிஷேகத்துடன் பூஜை செய்து வந்தனர். அப்போது அம்மன் இருந்த இடம் மிகவும் பள்ளமாகவும், அம்மனின் சுயம்பு வடிவம் சுமார் ஒன்னரை அடி உயரம் மட்டுமே வெளியே தெரிந்த நிலையிலும் இருந்தது. நாளடைவில் இந்த காலனியை காக்கும் தெய்வமாக விளங்கியது.
இச்சூழலில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நிறைவேறியது. அம்மன் குடிகொண்டுள்ள இடத்தை அடுத்துள்ள இடத்தை வாங்கியவர் சுற்றுச் சுவர் கட்ட அஸ்திவாரம் தோண்டினார். சுற்றுச்சுவர் கட்டினார். அம்மன் சிலைக்கும், சுற்றுச் சுவருக்கும் இருந்த இடைவெளி சுமார் முக்கால் அடி மட்டுமே என்பதால், அம்மனைக் கண்டு தொழ முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் பூமி வாங்கியதிலிருந்து அன்றுவரை பூஜை செய்து வழிபட்ட அம்மனை காணமுடியாத நிலை குறித்து தாங்கொணா துன்பம் கொண்டார். அவர் மனதை மிகவும் பாதித்தது. வீட்டு உரிமையாளரை நேரில் சென்று அம்மன் சிலை உள்ள பகுதியில் இரண்டு செண்ட் இடம் தேவை எனவும் அதற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் தருவதாகவும் மன்றாடினார். அவர் மறுத்துவிட்டார். அம்மன முகத்தை பார்க்க முடியாவிட்டாலும் தினசரி அங்கு சென்று வேண்டி வந்தார். ஆனால், குடியிருப்பில் இருந்த பக்தர்களும், அம்மனை வழிபட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து பல தீய சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடந்தன. குடியிருப்புவாசிகள் செய்வதறியாது கலங்கி, அம்மனே கதி என வேண்டி நின்றனர். இச்சமயத்தில் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் கிரஹபிரவேச பூஜைக்காக புரோகிதர் ஒருவர் வந்திருந்தார்.
தேவபிரசன்னம் பார்ப்பதிலும் கைதேர்ந்தவர். கிரஹபிரவேசம் முடிந்த பின் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் இப்பகுதியில் உள்ள அம்மனை தற்போது நீங்கள் பூஜிப்பதில்லை. அதனால் அம்மன் கோபத்துடன் உக்கிரமாக உள்ளார். அவரை குளிர்வித்து, ஆவன செய்யுங்கள். அம்மன் உங்களைக் காப்பாள் எனக் கூறினார். உடனே அப்பகுதிவாசிகள் ஒன்றுகூடி ஒரு குழுவாக தென்னந்தோப்பின் உரிமையாளரான விவசாயிடம் சென்று நடந்தவற்றைக் கூறினர். நீண்ட ஆலோசனைக்குப் பின் அம்மனை அங்கிருந்து எடுத்து பொதுவான ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்து தினசரி பூஜைகள் செய்யச் சம்மதித்தார் விவசாயி. ஒரு நல்ல நாளில் எடுத்து சென்று முறைப்படி பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வாருங்கள். மேலும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் குறிப்பாக நிதி பங்களிப்பையும் செய்வதாக உறுதி அளித்தார். 2015ம் வருடம் மார்ச் மாதம் ஒரு நல்ல நாளில் அந்த சிலையைத் தோண்டி எடுத்து கழுவி சுத்தம் செய்தனர். பலகைக்கல் வடிவில் சுயம்பு ரூபமாக காட்சி தந்த அம்மன் சிலையைக் கண்ட அனைவரின் முகமும் ஆச்சரியத்தால் விரிந்தன.
அதுநாள்வரை அரை குறையாகவே தெரிந்த அம்மனின் வடிவை முழுமையாகக் கண்டவர்கள் ஆனந்தத்தால் துள்ளினர். அது சுமார் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. மத்தியில் திரிசூலமும் வலது மேற்புறத்தில் சந்திரனும், இடது மேற்புறத்தில் சூரியனும் செதுக்கப்பட்டிருந்தது. உளி பட்டாலே சிதறிப் பெயர்ந்து விடும் வெங்கக்கல் எனும் தன்மையுடைய கல்லினாலான இவ்வுருவத்தை பரிசோதித்த சிற்பி ஒருவர் 500 முதல் 600 ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இது சிவனும் அம்மனும் இணைந்த உருவம். அம்மனுக்கு சூலமும் ஈசனுக்கு சந்திர சூரியனும் வடிக்கப்பட்டுள்ளன. எனவே இத்திருமேனியை சூலத்தம்மன் என்ற திருநாமத்தில் அழைத்து வழிபடத் தொடங்கினர். தேவியின் வாகனமாக நந்திதேவர் உள்ளார். ஊர் பெரியவர்கள், பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஒரு பொது இடத்தில் பந்தலின் கீழ் மேடை அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தனர். மார்ச் 30ம் தேதி அன்று பக்தர்கள் மற்றும் சான்றோர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. மண்டல காலத்தில் பக்தர்களின் வேண்டுதல்களை பரிவுடன் தாயுள்ளதோடு நிறைவேற்றியதால், ஒவ்வொவரும் மண்டலபூஜையில் தங்களது, பங்களிப்புடன் கலந்து கொண்டு மனநிறைவெய்தினர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு அம்மன் சுயம்புவாக வீற்றிருக்கிறாள்.
இருப்பிடம் : கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் சாலையில், தொப்பம்பட்டி பிரிவில் இறங்கி 2 கி.மீ. தொலைவில் உள்ள கோயிலை அடையலாம். ஆட்டோ வசதி உள்ளது. கோவை ரயில் நிலையத்திலிருந்து பேருந்து எண் 6 ஏ, 32 ஏ, 102 ஏ, 27 ஏ மூலம் தொப்பம்பட்டி செல்லலாம்.