இங்கு சங்கடஹர சதுர்த்தி தேய்பிறை அஷ்டமி கிருத்திகை சஷ்டி பிரதோஷம் ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. விநாயக சதுர்த்தி விழா வருடத்தின் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சம்பத்ரா அபிஷேகமும் (ஆண்டுவிழா) முக்கிய விழாவாகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில்,
பொம்மணம்பாளையம்,
கோயம்புத்தூர்.
பொது தகவல்:
பக்தர்கள் கருவறையை சுற்றி வரும் வகையில் அமைப்பு உள்ளது. விநாயகப் பெருமான் சிலையின் பீடம் ஆகம விதிகளின்படி குறைந்த அளவு உயரத்தில் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. கருவறை நுழைவு வாயிலின் ஒருபுறம் நர்மதேஸ்வரர் மறுபுறம் ஞானாக்ஷ்சி அம்மன் வீற்றுள்ளனர். கோஷ்டத்தில் மேதா தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்க்கை ஆகியோர் அருள்கின்றனர். கோயிலின் வெளியே நவகிரஹ சன்னிதியும் காலபைரவர் சன்னிதியும் உள்ளன. கோயிலைச் சுற்றியுள்ள பலி பீடங்கள் உயரமான தூண்களின் மீது அமைக்கப்பட்டுள்ளன. ஆதி மூலஸ்தானத்திலிருந்த விநாயகரை புதியதாகக் கட்டப்பெற்ற கோயிலுக்கு இடம் மாற்றியதால் அங்கு ஒரு புதிய சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு ராகுவும் கேதுவும் உடன் வீற்றுள்ளனர்.
பிரார்த்தனை
லட்சுமி விநாயகராக அருள்பாலிப்பதால் சகல செல்வங்களையும் அள்ளி தருகிறார்.
நேர்த்திக்கடன்:
விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது.
தலபெருமை:
சிலையை பாலாலய அறையிலிருந்து எடுத்து வந்தபோது மூன்று பேர் மட்டுமே தூக்கி வந்தனர். எங்கும் கீழே வைக்கவில்லை. முதலில் 8 பேர் சேர்ந்து தூக்க முடியாத சிலையை மூன்று பேர் மட்டும் இலகுவாக தூக்கி வந்தது அதிசயமே. தன் சொந்த இடத்தில் வந்து அமர்வதால் அவரே செய்த அற்புதம் போலும்.
தல வரலாறு:
கோவை வடவள்ளியிலிருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் பொம்மணம்பாளையம் எனும் ஊர் உள்ளது. இவ்வூரில் (ஜி.கே.எஸ்) நகர் எனும் குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் குடியேறியவர்கள் அங்கு சிறியமேடை அமைத்து விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். கூடவே அரசு வேம்பு மரங்களையும் நட்டுவைத்தனர். வருடங்கள் ஓடின குடியிருப்பு பகுதியில் குடியேறியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அப்பகுதியில் ஒரு சிறிய அளவில் தொழில் செய்யும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் வசித்து வந்தார். இவர் பல வகையான தொழில் செய்து நஷ்டமடைந்தார்.
சொந்த வீட்டையும் விற்றார். குடும்ப செலவை சமாளிப்பதே பெரும் சவாலாக இருந்தது. ஆனால் இடிந்து போய் உட்காரவில்லை. எப்படியும் வாழ்வில் முன்னேறி விடலாம் என்ற தன்னம்பிக்கை இருந்தது. இந்நிலையில் மருத மலைக்குச் சென்று முருகன் முன் நின்றார். கண்ணீர் மல்க தன் நிலையை முறையிட்டு அவரைச் சரணடைந்தார். நாட்கள் நகர்ந்தன. புதியதாகத் தொடங்கிய வீடு கட்டி விற்கும் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைத்தது. அதன் பின் மருதமலை முருகனின் அதிதீவிர பக்தர் ஆனார். தினமும் காலை மருத மலைக்குச் சென்று முதல் வணக்கம் செலுத்தி வேண்டி துதித்த பின் தான் தன் பணிகளைத் தொடரும் அளவிற்கு மாறி விட்டார். மருத மலையில் நீர்கசிவு போன்ற சிறு சிறு குறைபாடுகளைச் சீர் செய்து கொடுத்தார்.
எல்லாம் அவனே என்ற நிலைக்கு வந்து விட்டார். இந்நிலையில் அவருக்கு முருகனிடமிருந்து ஓர் உத்தரவு வந்தது, நான் இங்கு குளிர்ச்சியாக நல்ல வசதியுடன் மலைமீது இருக்கிறேன். அங்கு என் அண்ணன் விநாயகப்பெருமான் வெய்யிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் துன்பத்தில் வீற்றிருக்கின்றார். அவருக்கு ஒரு நல்ல இருப்பிடத்தை அமைத்துக் கொடு என்றார். ஒரு கணம் அதிர்ந்து விட்டார். முருகன் குறிப்பிட்டது தன் குடியிருப்பில் உள்ள விநாயகப் பெருமானைத் தான் என்பதை உணர்ந்தார். முருகனே உத்தரவு போட்டு விட்டார். காலம் தாழ்த்த முடியுமா? தன் ஒருவனாலேயே கோயிலைக் கட்டி முடிக்கும் அளவிற்கு வசதியை அந்த மருதமலை முருகன் கொடுத்துள்ளார். பொது கோயில் என்றால் அனைவரது பங்களிப்பும் தேவை என்பதால் குடியிருப்பு வாசிகளைக் கலந்து முடிவு செய்தார். குடியிருப்பு வாசிகளின் பங்களிப்புடனும் ஒத்துழைப்புடனும் ஆதிமூலஸ்தானத்திற்கு முன்புறம் கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டது.
பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக மரத்தடியில் உள்ள விநாயகரை எடுத்து பாலாலயம் செய்வதற்காக ஒரு சிறிய அறைகட்டப்பெற்றது. அச்சிலையை பாலாலய அறைக்கு 8 பேர் சுமந்து சென்று வைக்க முடியவில்லை. மூன்று அடிக்கு ஒரு முறை கீழே வைத்து சற்று இளைப்பாறிய பின் மீண்டும் எடுத்து சென்று அவ்வறையில் வைத்தனர். கோயில் கட்டுமான பணிக்காக பூமி பூஜை போடப்பட்டு, மருதமலை முருகன் அருளால் வெகுவிரைவில் எதிர்பார்த்த காலக்கெடுவுக்குள் அற்புதமாய் அமைந்தது. கோயில் தரைதளம் சுமார் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு அதன் மீது கோயிலை கட்டி உள்ளனர். 7 படிக்கட்டுகள் ஏறி தரைத் தலத்தை அடையலாம். விலாசமான மண்டபத்தின் மேற்கு பகுதியில் சுமார் 1 1/2 அடி உயரத்தில் கருவறை அமைத்து விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்துள்ளனர். மருதமலை சிவாச்சாரியார் தலைமையில் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தேறியது.