இத்தலத்தில் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, பவுர்ணமி ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் ஆகிய விழாக்கள் கொண்டாடப் பட்டாலும், மகா சிவராத்திரி விழா இத்தலத்தின் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அன்று இரவு நான்கு கால பூஜைகளில் பெருந்திரளான ஊர்மக்கள் கலந்து கொள்வது சிறப்பு. சனிதோஷ பரிகார பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன.
தல சிறப்பு:
ஈசன், பிரம்மா, பெருமாள் மூவரும் ஒரே கருவறையில் எழுந்தருளி அருள்பாலிப்பதால் சிறப்புமிக்கதாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் 5 மணி வரை திறந்திருக்கும்.
இக்கோயிலில் பூஜைகள் தடைபெறாமல் நடைபெறவும், கோயில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் மராமத்து பணிகள், திருவிழாக்கள் நடைபெறத் தேவையான நிதி ஆதாரங்களுக்காக பூமியை தானமாக அளித்ததுடன் தகுதியான நபர்களை பணியில் அமர்த்தினார். கோயிலில் பூஜைகளும் திருவிழாக்களும் தங்கு தடையின்றி நடந்து வந்தன. காலப்போக்கில் முறையான பராமரிப்பின்றி சிறிது சிறிதாகக் கோயில் சிதிலமடைந்து, பூஜைகள் எதுவுமின்றி பாழடைந்த நிலைக்கு வந்தது. இது கிராமமக்களின் மனதை மிகவும் பாதித்தது.
கோயிலில் பூஜைகள் முறையாக நடந்தால் தானே கிராமம் எல்லா வகையிலும் சிறக்க முடியும்? எனவே ஊர் பெரியவர்களும் பொது மக்களும் ஒன்று கூடி கோயிலைப் புணரமைக்க தீர்மானித்தனர். நிதி ஒரு பகுதியை கிராமமக்களிடம் திரட்டினர். பற்றாக்குறையை சமாளிக்க, நிதி ஆதாரத்திற்கு அரசை அணுகிய போது நல்லபலன் கிடைத்தது. அறநிலையத்துறை உதவியாலும் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோயில் நிதி உதவியாலும் கருவறை, அர்த்த மண்டபம் விமானம் மகாமண்டபம் ஆகிய திருப்பணிகள் செவ்வனே மேற்கொள்ளப்பட்டு 03.09.2009 அன்று கும்பாபிஷேகம் சான்றோர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்தேறியது.
கோயிலின் முன் அரசமரத்தடியில் உள்ள மேடையில் விநாயகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். நுழைவு வாயிலைக் கடந்து நாம் உள்ளே சென்றால் நந்தியுடன் கூடிய அழகிய நந்தி மண்டபம் உள்ளது. அதை அடுத்து மகா மண்டபம், ருத்ர தாண்டவம், மயான தாண்டவம், பிட்டுக்கு மண் சுமந்தவர், சிவசக்தி தாண்டவம், பார்வதி பரமசிவன் திருக்கல்யாணம் மற்றும் ஆனந்த தாண்டவம் என அழகிய சுதைச் சிற்பங்கள் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. அர்த்த மண்டப நுழை வாயிலின் முன் வல்லப கணபதியும், இடப்புறம் வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமணியர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் ஒரே பீடத்தில் பிரம்மா, ஈசன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே எழுந்தருளியுள்ளனர்.
பிரார்த்தனை
பிரம்மஹத்திதோஷம், பிதுர் கர்மதோஷம், நவகிரஹ தோஷம் ஆகிய தோஷ பரிகார பூஜைகளுக்காக பக்தர்கள் பெரும் அளவில் வருகின்றனர். ஆயுள் விருத்தி, தொழிலில் ஏற்படும் தடை, புத்தி சுவாதீன கோளாறு, செய்வினையை அகற்ற இத்தலத்தில் மேற்கொள்ளப்படும் பூஜைகள் நற்பயனைத் தருவதாக நம்புகின்றனர்.
நேர்த்திக்கடன்:
ஆதி நந்தீஸ்வர பெருமானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு முறையும் ஒரு சொம்பு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கின்றது. தடைப்பட்ட திருமணங்கள் இம்மூர்த்திகளை துதித்து அர்ச்சனை செய்து வேண்டினால் தடை நீங்கி திருமணம் நடப்பதாக கூறுகின்றனர்.
தலபெருமை:
பிரம்மா நான்கு தலைகளும், நான்கு கரங்களுடன் வலது கரத்தில் தபோ கட்டையும், ஏடும் தாங்கி ஆசீர்வாதம் வழங்கும் நிலையில் அருள்பாலிக்கின்றார். ஈசன் தியான நிலையில் பத்மாசனத்தில் ஜடா முடியுடன் நெற்றிக்கண் அமைப்புடன் அமர்ந்தகோலத்தில் விளங்குகின்றார். நான்கு கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அபய ஹஸ்த கோலத்தில் மகாவிஷ்ணு பகவான் நின்ற கோலத்தில் அருள்கின்றார்.
கருவறை பீடம் பிரம்ம ஸ்தானத்திலும், ஈசன் ஆட்சிபீட ஸ்தானத்திலும், விமானம் மகாவிஷ்ணு ஸ்தானத்திலும் அமைந்த சிறப்பு மிக்க ஒரே தலம். இக்கோயிலை ஒரு முறை வலம் வந்தால் உலகை சுற்றி வந்த பலன் கிடைப்பதாக கூறுவது ஆன்மிக சான்றோர்களின் கருத்தாக உள்ளது. பொதுவாக கோஷ்டத்தில் காணப்படும் மூர்த்திகள் எதுவும் இங்கு இல்லை. கோயில் வெளிபிரகாரத்தில் தென் பகுதியில் வன்னி மரத்தடியில் ஆறு கரங்களுடன் நின்ற கோலத்தில் தனது வாகனமான காகத்துடன் சனி பகவான் அருள்பாலிப்பது சிறப்பாகும்.
தல வரலாறு:
கிராமத்துக் கோயில்கள் என்றாலே ஒரு தனித்தன்மையுடன் விளங்குவதைக் காணமுடியும். ஆடம்பரம் ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் அமைதியான கிராமிய சூழலில் பசுமையான தென்னைமரங்கள் அடர்ந்த தோப்புகளின் நடுவே பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரையில், மஞ்சநாயக்கனூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு திவ்ய தலம் தான் அமணீஸ்வரர் திருமூர்த்தி திருக்கோயில். ஈசன் பிரம்மா, பெருமாள் மூவரும் ஒரே கருவறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அற்புத திருத்தலம். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கோயில். திப்பு சுல்தான் கொங்கு மண்டலத்தை ஆட்சி புரிந்த காலத்தில் நடந்த நிகழ்வு. மன்னரின் பட்டத்து குதிரை தீடீரென ஒருநாள் காணாமல் போனது. மிகவும் அன்பாகவும் பாசத்துடனும் வளர்த்த குதிரை காணாமல் போனதால் மன்னன் மிகவும் மனம் வருந்தினார்.
குதிரையைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தார். பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூர் எனும் கிராமத்தில் எர்ரம நாயக்கர், எத்தலப்ப நாயக்கர் எனும் இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். மன்னரின் இந்த அறிவிப்பைக் கேட்டவுடன், குதிரையை கண்டு பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கினர். அவர்கள் முயற்சி வீண் போகவில்லை. வெகுவிரைவில் குதிரையைக் கண்டுபிடித்து மன்னரிடம் ஒப்படைத்தனர். இவ்வளவு குறுகிய காலத்தில் குதிரை திரும்ப கிடைத்ததில் மன்னன் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். ஆழியாறு அணைப்பகுதியிலிருந்து திருமூர்த்தி மலைப்பகுதி வரை அமைந்துள்ள நிலப்பரப்பை தானமாக அளித்ததுடன், அப்பகுதிக்கு இரு வரையும் பாளையப்பட்டு மன்னர்களாக அறிவித்து கவுரவித்தார். இவ் விருவர்களும் சகோதரர்கள் தானே? கருத்து வேறுபாடு இவர்களையும் விட்டுவைக்கவில்லை. விளைவு -பாகப்பிரிவினை ஏற்பட்டது.
சான்றோர்கள் முன்னிலையில் கிழக்கே உள்ள திருமூர்த்தி மலைப்பகுதியை அண்ணனாகிய எத்தலப்ப நாயக்கரும் மேற்கே உள்ள ஆழியாற்றுப் பகுதியையும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களையும் தம்பி எர்ரம நாயக்கரும் பிரித்துக் கொண்டனர். மஞ்ச நாயக்கனூர் எர்ரம நாயக்கரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியானது. திருமூர்த்தி மலைப்பகுதியில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரரை இருவரும் வழிபட்டு வந்தனர். மஞ்சநாயக்கனூர் பகுதியில் கறவை மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வந்தன. இவை பசுமையான புல்வெளிப் பகுதியில் மேய்ந்து வருவது வழக்கம். ஒரு சமயம் பாலாற்றின் கரையில் அமைந்த மணல் திட்டில் ஒரு பசுமட்டும் தினமும் தானாவே பாலைச் சொரிந்து வருவதைக் கண்ணுற்றனர். இச்செய்தியை இவ்வூர் மக்கள் பாளையப்பட்டாரிடம் தெரிவித்தனர்.
மன்னரே நேரடியாக காணவந்தார். பசு பால் சொரிந்ததை கண்ணாரக் கண்டு வியந்தார். மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் அரண்மனையை நோக்கிச் சென்றார். இந் நிலையில் எர்ரமநாயக்கர் கனவில் ஒரு முதியவர் தோன்றி பசு பால் சொரிந்த இடத்தில் மும்மூர்த்திகள் ஒருசேர ஒன்றாக உள்ளனர். அந்த இடத்தில் ஒருகோயில் கட்டி பூஜித்து வாருங்கள் என்றார். அடுத்த நாள் பாளையப்பட்டாரிடம் கனவு செய்தியைத் தெரிவிக்க, அவர்கள் முன்னிலையில் புற்றை அகற்றியபோது சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் சிலைகள் இருந்தன. நிலத்திலிருந்து தோன்றியதாலும் புற்று மண் சூழ்ந்திருந்ததாலும் இக்கோயில் நாதர் நிலப்புற்றீஸ்வரர் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகின்றார். எர்ரம நாயக்கர் பசு பால் சொரிந்த இடத்தை ஆதாரமாகக் கொண்டு திருக்கோயில் நிர்மாணித்து புற்றிலிருந்து கிடைத்த மும்மூர்த்தி சிலைகளைப் பிரதிஷ்டை செய்தார். இந்த கோயில் அமணீஸ்வரர் எனவும் பெயர் பெற்றது.
படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஈசன் பிரம்மா, பெருமாள் மூவரும் ஒரே கருவறையில் எழுந்தருளி அருள்பாலிப்பதால் சிறப்புமிக்கதாகும்.
இருப்பிடம் : பொள்ளாச்சி பஸ் நிலையத்திலிருந்து 50, 58,16 தடம் எண் மூலம் நால்ரோடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ மூலம் மஞ்சநாயக்கனூர் கோயிலை அடையலாம். பொள்ளாச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.