பதிவு செய்த நாள்
16
நவ
2019
01:11
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஆர்.பொன்னாபுரம், ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், மண்பாண்ட தொழிலாளர்கள், கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறினர். மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது:சமத்துார் குளம் துார்வாரும் போது எடுக்கப்பட்ட மண்ணை கொண்டு, அகல்விளக்கு தயாரிக்கப்படுகிறது. மழை இல்லாததால், அகல்விளக்கு தயாரித்து உலர வைக்க எளிதாக இருக்கிறது.
தற்போது, அகல்விளக்கு மற்றும் கோவில்களில், தீபம் ஏற்றுவதற்காக பயன்படுத்துவதற்காக பெரிய தீப விளக்குகளும் தயாரிக்கப்படுகிறது.ஆயிரம் அகல் விளக்குகள், 700 - 800 ரூபாய்க் கும், பெரிய தீப விளக்குகள், 10 - 50 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு உற்பத்தி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.மண்பாண்ட தொழிலுக்கு மூலதனமான மண், கோதவாடியில் எடுக்க அனுமதிக்க வேண்டும். தடையின்றி மண் கிடைத்தால், தொழில் தொய்வின்றி மேற்கொள்ள முடியும். இவ்வாறு, தெரிவித்தனர்.