சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக விழா நடைபெற்றது. சுந்தரேஸ்வரர் சன்னதி முன் தாமரையில் லிங்க வடிவில் நெல் பரப்பி 1,008 சங்குகள் வைக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையுடன் சங்காபிஷேக விழா நடைபெற்றது. புனித நீர் ஊற்றப்பட்ட சங்குகளை ஒன்றன்பின் ஒன்றாக சிவாச்சாரியார்கள் சொக்கநாதருக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடத்தினர். அலங்காரத்தில் மீனாட்சி சொக்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு கோயிலில் சோமநாதர் சுவாமி சன்னதி முன் 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. ராஜஷே் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர். பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை நடைபெற்றதும் மூலவர் சோமநாதர் சுவாமிக்கு சங்குகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த புனித நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டு சுவாமி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருப்புத்துார்: திருப்புத்துார் மேலத்திருத்தளிநாதர் கோயிலில் கார்த்திகை முதல் திங்களையொட்டி நடந்த முதலாம் சோமவாரத்தை முன்னிட்டு மாலை3.30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியர்களால் சங்குகளுக்கு வில்வ இலையால் சிறப்பு அர்ச்சனை நடந்தது. யாகவேள்வி பூர்ணாகுதிக்கு பின் மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.