கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2012 11:04
திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சாகைவார்த்தலுடன் சித்திரை பெருவிழா நேற்று துவங்கியது. விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா சாகை வார்த்தலுடன் நேற்று துவங்கியது. பல்வேறு கிராமங்களிலிருந்து பெண்கள் கஞ்சி மற்றும் கூழ் கலயங்களை எடுத்து வந்து நேற்று மாலை 5.45 மணிக்கு சுவாமிக்கு படையலிட்டனர். இன்று 18ம் தேதி பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலிக்கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் சுவாமி வீதியுலா, மே 1ம் தேதி இரவு திருநங்கைகள் தாலிக் கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. மும்பை, சென்னை, டில்லி, கல்கத்தா, கர்நாடகா, கேரளா மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். மறுநாள் 2ம்தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. அன்று பகல் 12 மணிக்கு அழுகளம் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது திருநங்கைகள் தங்கள் அணிந்திருந்த தாலிகளை அறுத்தெறிந்து விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைப்பர். மாலை 5 மணிக்கு உறுமைசோறு படையல், 7 மணிக்கு காளிக்கோவிலில் அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அரவான் சிரசு மட்டும் பந்தலடிக்கு கொண்டுவரப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்வித்து நத்தம், தொட்டி வழியாக கோவிலுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. 4ம் தேதி மஞ்சள் நீர் மற்றும் தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.