பதிவு செய்த நாள்
18
ஏப்
2012
11:04
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் சித்திரை பெருவிழா நேற்றுக்காலையில் கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக துவங்கியது. தொடர்ந்து, காலையிலும், மாலையிலும் ஸ்வாமி ஊர்வலம், கலைநிகழ்ச்சி நடக்கிறது. தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்றுக்காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, மாலையில் பஞ்சமூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு, வீதியுலா நடந்தது. இன்று (18ம் தேதி) பல்லக்கு ஊர்வலமும், சிம்மவாகனத்தில் விநாயகர் உலாவும், நாளை (19ம் தேதி) காலை பல்லக்கு ஊர்வலம், மாலையில் மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் ஊர்வலமும், 20ம் தேதி காலை விநாயகர் சந்தனக்காப்பும், மாலையில் சுப்பிரமணியர் மேஷ வாகனத்தில் ஊர்வலமும், 21ம் தேதி சுப்பிரமணியர் பல்லக்கு ஊர்வலம், மாலையில் சுப்பிரமணியர் வெள்ளிமயில் வாகனத்தில் ஊர்வலமும் நடக்கிறது. ஏப்ரல் 22ம் தேதி காலை சுப்பிரமணியர் ஸ்வாமிக்கு சந்தனக்காப்பு, மாலையில் சைவ சமயாச்சாரியார் நால்வர் புறப்பாடு, 23ம் தேதி காலையில் நால்வர் பல்லக்கு சந்திரசேகரர் பட்டம், மாலையில் சூரியபிறையில் சந்திரசேகரர் ஊர்வலமும் நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை சந்திரசேகரர் பல்லக்கு ஊர்வலமும் மாலையில் சந்திர பிறையில் சந்திரசேகரர் ஊர்வலமும், 25ம் தேதி காலை ஒன்பது மணிக்கு மேல் 10.30 மணிக்கு மேல் மிதுனலக்கினத்தில் கோவில் அஸ்டத் துவஜாரோகணம், மாலையில் தியாகராஜர் ஸ்வாமி பிரகாரத்தில் பிரதட்சணம் ஆகி வசந்த மண்டபத்தில் பிரவேஷம், செங்கோல் வைபவம் 64ம் வெள்ளாஞ்செட்டியார் வகையறாக்களின் உபயத்துடன் விமரிசையாக நடக்கிறது.
தொடர்ந்து, 26ம் தேதி காலை தியாகராஜர் எதாஸ்தானம் பிரவேஷம், மாலையில் சந்திரசேகரர் முத்துப்பல்லக்கில் ஊர்வலமும், 27ம் தேதி சந்திரசேகரர் பல்லக்கில் ஊர்வலம், மாலையில் பூத வாகனத்தில் சந்திரசேகரர் ஊர்வலம் நடக்கிறது. வரும் 28ம் தேதி காலை சந்திரசேகரர் சந்தனக்காப்பு மாலையில் வெள்ளியானை வாகனத்தில் சந்திரசேகரர் புறப்பாடும், 29ம் தேதி காலை சந்திரசேகரர் சந்தனக்காப்பு, மாலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் புறப்பாடும் நடக்கிறது. மறுநாள் 30ம் தேதி மாலையில் சந்திரசேகரர் கைலாச வாகனத்தில் புறப்பாடு, மே மாதம் ஒன்றாம் தேதி மாலையில் ரதோற்சவமும் நடக்கிறது. இரண்டாம் தேதி மாலையில் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் ஊர்வலம், மூன்றாம் தேதி காலை தியாகராஜர் பக்தர் காட்சியுடன் யதாஸ்தான பிரவேஷம் மாலை நடராஜன் வெள்ளைசாத்தி புறப்பாடும் நடக்கிறது. நான்காம் தேதி அரண்மனை தேவஸ்தானம் உபயத்தில் காலை தியாகராஜர் ருத்ரபாத தரிசனத்துக்கு பின், நடராஜர் ஸ்வாமி நான்கு வீதி புறப்பாடு, கோவிலுக்குள் தீர்த்தம் கொடுத்து யதாஸ்தான பிரவேஷம், சந்திரசேகரர் கோவிலுக்குள் உலா வந்து தீர்த்தம் கொடுத்தல், மஞ்சள் நீராட்டு விழா ஆகியன நடக்கிறது. அன்று மாலையில் மாதுஸ்ரீ காமாட்சி பாயிசாகேப்பால் செய்விக்கப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா நாட்களில் மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை சின்னமேளா என்னும் கலைநிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி கமிஷனர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் அசோகன், குணசேகரன் செயல் அலுவலர் அரவிந்தன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.