பதிவு செய்த நாள்
23
நவ
2019
10:11
போத்தனுார் : குறிச்சி அரவான் திருவிழா, வீதியுலா மற்றும் களப்பலியுடன் நேற்று நிறைவடைந்தது.குறிச்சி அனைத்து சமூகத்தார் பங்கேற்கும் ஒற்றுமை விழா எனும் அரவான் திருவிழா,12ல் கம்பம் நட்டு பூசாத்துதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 18 வரை அரவானுக்கு சிறப்பு பூஜை, மறுநாள் பெருமாள் கோவிலில் அரவான், அனுமார் சுவாமிகள் கட்டுதலும் நடந்தன. 20ம் தேதி காலை, அரவான் அலங்கரிக்கப்பட்டு உருமால் கட்டும் சீர் முடிந்து, பெருமாள் கோவிலில் இருந்து அரவான் எழுந்தருளுதலும் நடந்தன.தொடர்ந்து குறிச்சி குளக்கரை விநாயகர் கோவிலில் தீர்த்தமாடி சிறப்பு வழிபாட்டுடன் அரவான் புறப்படுதல், மாலை அரவான் கோவிலில் அரவான் - பொங்கியம்மன் திருமண விழா, மாவிளக்கு வழிபாட்டுடன் நடந்தன.
நேற்று முன்தினம் மதியம் அரவான் கோவிலில் முக்கிய விழா துவங்கியது. இரவு, குளக்கரை கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு சீர்முறை வழிபாடு முடித்து, அரவான் புறப்படுதலை தொடர்ந்து, மந்தைவெளி மைதானத்தில் முதுப்பார் சமூக பூஜை நடந்தது. நேற்று காலை, பிள்ளைமார் சமூக பூஜையை தொடர்ந்து, தேவேந்திர குல வேளாளர் சமூக பூஜை நடந்தது. இதையடுத்து, அரவான் திருவீதி உலா புறப்பட்டது. இதில், பல்வேறு சமூகத்தார் சார்பில் பூஜைகள் நடந்தன.சுந்தராபுரம் அரவான் திடலில், கோனார், போயர், கவுண்டர் சமூக பூஜைகள் நடந்தன. மீண்டும் திருவீதியுலா பெருமாள் கோவிலை சென்றடைந்தது. களப்பலி மேடைக்கு சென்ற அரவானுக்கு கிருஷ்ணர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. திரளானோர் பங்கேற்று, அரவான், பொம்மியம்மனை வழிபட்டனர். இறுதியாக, தேவேந்திர குல வேளாளர் சமூக மேடையில், அனைத்து சமூக பெரியதனக்காரர்கள் முன்னிலையில், களப்பலியுடன் விழா நிறைவடைந்தது.