பதிவு செய்த நாள்
23
நவ
2019
12:11
சபரிமலை : சபரிமலையில், பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, சன்னிதானம் மருத்துவமனையில், 10 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 16 இடங்களில், அவசர சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மலையேறி வரும் பக்தர்களுக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டால், சிகிச்சை அளிக்க, சன்னிதானத்தில் அரசு மருத்துவமனை தயாராக உள்ளது. இதய நோய், அறுவை சிகிச்சை மற்றும் பொது மருத்துவ நிபுணர்கள் உட்பட 10 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ரத்த பரிசோதனை மையம், எக்ஸ்ரே, இ.சி.ஜி., போன்ற வசதிகள், இரண்டு ஆம்புலன்ஸ்கள் உள்ளன. கூடுதல் சிகிச்சை தேவைப்படும் பக்தர்கள், அடுத்த, 10 நிமிடங்களில் பம்பை கொண்டு செல்லப்படுவர். நீலிமலை மற்றும் அப்பாச்சிமேட்டில் அடிவாரம், மத்திய பகுதி, டாப் என ஆறு இடங்களில், அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வனத்துறை முகாம், மரக்கூட்டம், கியூ காம்ப்ளக்ஸ், சரங்குத்தி, வாவர்நடை, பாண்டித்தாவம், கரிமலை ஆகிய இடங்களிலும், 24 மணி நேரமும் அவசர சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. இவை, ஹாட்லைன் போன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.இதுபோல ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவமனைகளும் செயல்படுகின்றன. சின்னம்மை தடுப்பூசியும், அரசு மருத்துவமனையில் போடப்படுகிறது.
பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டுகோள்: பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ள சபரிமலையில், பாலிதீன் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால், மூன்று ஆண்டுகளுக்கு முன், பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டது.தற்போது, குடிநீர் பாட்டில்கள், 98 சதவீதம் குறைந்து விட்டன. ஆனால், இருமுடி கட்டில் பிளாஸ்டிக் பன்னீர் பாட்டில், அவல் பொரி பாலிதீன் கவர்கள் பெரும் சவாலாக உள்ளாது. மாளிகைப்புறம் கோவிலில் தினமும் நுாற்றுக்கணக்கான கிலோ பன்னீர் பாட்டில், பாலிதீன் கவர்கள் தேங்குகின்றன. மலையில் எந்த சன்னிதியிலும் பன்னீர் ஏற்கப்படுவதில்லை. எனவே, பன்னீர் கொண்டு வருவதை தவிர்க்கலாம். பொரி, அவலை காகித கவரில் கொண்டு வரலாம். இதற்கு வியாபாரிகளும், பக்தர்களும் ஒத்துழைக்க வேண்டும் என, தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.பார்க்கிங் கட்டணம்சபரிமலை வரும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும், நிலக்கல்லில் பார்க்கிங் செய்ய வேண்டும். இங்கு 16 பார்க்கிங் கிரவுண்ட்களில், 10 ஆயிரம் வாகனங்கள் வரை, ஒரே நேரத்தில் பார்க்கிங் செய்ய முடியும்.
4,211 சதுர மீட்டர் இடம் காலியிடமாக விடப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்ல, பாதை வசதியும் செய்யப்பட்டுள்ளது.இங்கு பார்க்கிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஸ், 100 ரூபாய், மினி பஸ், 75, ஐந்து முதல், 14 இருக்கை வாகனங்கள், 50, நான்கு இருக்கை கார், 30, ஆட்டோ, 15 ரூபாய்.இருச்சக்கர வாகனங்களுக்கு கட்டணம் இல்லை. இங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து, அதிகாரிகள் சோதனை நடத்தி, கட்டணம் திரும்ப கொடுக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலித்தால், 04735 205 320, 94465 22061 ஆகிய எண்களில் புகார் செய்யலாம்.