சபரிமலை : சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என தேவசம்போர்டு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ள சபரிமலையில் பாலிதீன் குப்பையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டது. இருமுடி கட்டுகளில் பிளாஸ்டிக் கொண்டு வருவதை கேரள உயர்நீதிமன்றம் தடை செய்தது. தற்போது குடிநீர் பாட்டில் 98 சதவீதம் குறைந்து விட்டது. ஆனால் இருமுடிகட்டில் பிளாஸ்டிக் பன்னீர் பாட்டில் அவல் பொரி பாலிதீன் கவர்கள் பெரும் சவாலாக உள்ளாது. மாளிகைப்புறம் கோயிலில் தினமும் நுாற்றுக்கணக்கான கிலோ பன்னீர் பாட்டில் பாலிதீன் கவர்கள் தேங்குகிறது.இதை தடுக்க பக்தர்களுக்கு தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. மலையில் எந்த சன்னதியிலும் பன்னீர் ஏற்கப்படுவதில்லை. எனவே கொண்டுவரும் பன்னீரை சக பக்தர்கள் மீது தெளித்து விட்டு பாட்டில்களை வீசி செல்கின்றனர். எனவே பன்னீர் கொண்டு வருவதை தவிர்க்கலாம். பொரி அவலை காகித கவரில் கொண்டு வரலாம்.இதற்கு வியாபாரிகளும் பக்தர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.