பதிவு செய்த நாள்
23
நவ
2019
12:11
கோவை: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், வழிபாட்டுக்கான வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு நடுவே, வி.ஐ.பி.,கள், அரசியல்வாதிகள் சிறப்பு நுழை வாயில் வாயிலாக, சுவாமியை தரிசிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம், கட்டண நடைமுறை செயல்பாட்டில் இருக்கும்.கோவை மாவட்டத்தில், 3,000 க்கும் மேற்பட்ட பட்டியல் சாராத கோவில்கள், 398 பட்டியல் சார்ந்த கோவில்கள் உள்ளன. கட்டண தரிசனம், பொதுவழி தரிசனம், வி.ஐ.பி., தரிசனம் செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.பொது வழியில் வரும் பக்தர்கள், மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பர். சிறப்பு வழியில் வரும் வி.ஐ.பி.,கள், சிறிது நேரத்தில் சுவாமியை தரிசித்து விட்டு, பிரசாதம் பெற்றுக் கொண்டு, குருக்கள் அல்லது பூசாரியிடம்,விருப்பப்படும் தொகையை அன்பளிப்பாக கொடுக் கின்றனர். கோவிலுக்கான வருவாயில் இழப்பு ஏற்படுகிறது.
அதனால், கோவை மருதமலை சுப்ரமணியர், ஈச்சனாரி விநாயகர், பொள்ளாச்சி மாசானியம் மன், காரமடை அரங்கநாதர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் வி.ஐ.பி., தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ’கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் வி.ஐ.பி., நுழைவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இறைவனுக்கு கீழ் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தவே இந்நடைமுறை பின்பற்றப் படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். அதே நேரம், கட்டண முறை தரிசனம் அமலில் இருக்கும்’ என்றனர்.