பதிவு செய்த நாள்
25
நவ
2019
05:11
தஞ்சாவூர், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் பலநாட்களாக குளம் போல தேங்கியுள்ள மழைநீரால், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரத்தில் இரண்டாம் ராஜராஜசோழனால் கி.பி. 12-ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. லட்சகணக்கான அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. புராதன கோவில் என்பதால், இந்திய தொல்பொருள் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இக்கோவிலின் சிற்பங்கள் வேறு எங்கும் இல்லாத வகையில் நுண்ணிய கலை நயத்துடன் கூடிய வேலைப்பாடுகளோடு இருப்பதால், உலக பாரம்பரிய சின்னமான யுனஸ்கோ அமைப்பு கடந்த 2004ல், அங்கீகாரத்தை வழங்கியது. இங்குள்ள சிற்பங்களையும், கோவிலின் அழகையும் காண, ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் ஐராவதீஸ்வரர் கோவிலின் வெளிப்பிரகாரம் மற்றும் முன்மண்டபம் ஆகிய இடங்களிலும், பெரியநாயகி அம்பாள் கோவில் பகுதியிலும் மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. அதிலும் அம்பாள் சன்னதியில் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் பலநாட்களாக தேங்கியிருப்பதால், பாசி படர்ந்து பூச்சிகள் நிறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும்,பக்தர்களும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மழைநீர் உடனடியாக வடிந்து செல்லும் வகையில் ஒரு நிரந்தரமான கட்டமைப்பை இல்லாததால் தான் காரணம் என பக்தர்களும்,சுற்றுலா பயணிகளும் குற்றசாட்டினர். இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் கூறியதாவது: ஐராவதீஸ்வரர் கோவிலைச்சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் காலப்போக்கில் மேடாகவும், கோயில் உள்ள இடம் பள்ளமாகவும் மாறிவிட்டது. இதனால் மழைநீர் வடிவதில் சிரமம் உள்ளது. மழைநீரை ஏற்கெனவே மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. தற்போது 50 லட்சம் ரூபாய் செலவில், கோவில் வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. அடுத்த வாரத்தில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளது என்றார்.