பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் புத்தகக்கடை ஒன்றை நடத்தினார். ஒருமுறை பணியாளரிடம் விற்பனையைப் பார்க்கச் சொல்லி விட்டு, தன் அறையில் முக்கிய பணியில் ஈடுபட்டார். அப்போது கடைக்கு வந்தார் ஒரு வாடிக்கையாளர். நீண்டநேரமாக தேடி ஒரு புத்தகத்தை தேர்வு செய்தார். அதன் விலை ஒரு டாலர் என்றார் பணியாளர்.
விலை அதிகமாக இருக்கிறதே என்று சொல்லி விட்டு வேறொரு புத்தகத்தை எடுத்தார். இதுவும் ஒரு டாலர் தான் என பதில் வந்தது. தம்பி! விலை தொடர்பாக முதலாளியைச் சந்திக்க வேண்டும். என்றார்.
ஐயா! அவர் முக்கிய பணியில் இருக்கிறார். தங்களிடம் பேச நேரமில்லை என்றார் பணியாளர்.
பிராங்க்ளின் வெளியே வந்தார். ஐயா! இந்த புத்தகத்தின் விலை ஒரு டாலர் என்பது அதிகமாக தோன்றுகிறது. கொஞ்சம் குறைக்கலாமா என்றார். பிராங்க்ளின் சம்மதிக்கவில்லை. முடிவாக விலை சொல்லுங்கள் எனக் கேட்டார் வாடிக்கையாளர்.
1 டாலர் 25 சென்ட் என்றார் பிராங்க்ளின்.
குறைக்கச் சொன்னால் விலை அதிகம் கேட்கிறீர்களே! நியாயமா? என்றார் வாடிக்கையாளர்.
புத்தக விலை ஒரு டாலர் தான். ஆனால் பொன்னான என் நேரம் மதிப்பு மிக்கது. அதற்காக 25 சென்ட் என்றார் பிராங்க்ளின்.
வாடிக்கையாளரோ சளைக்காமல் முயற்சித்தார்.
இரண்டு டாலர் என்றார் பிராங்க்ளின்.
கோபத்துடன் வாடிக்கையாளர், ஏன் இன்னும் விலையை உயர்த்தினீர்கள்? எனக் கத்தினார்.
நேரத்தின் அருமை அறிந்தவன் நான். உங்களுக்கும் உணர்த்தவே இந்த விலையேற்றம் என்றார்.
வாடிக்கையாளர் இரண்டு டாலரைக் கொடுத்து விட்டு புத்தகத்துடன் கிளம்பினார். உலகத்தில் விலை மதிக்க முடியாத அரிய பொருள் நேரம் மட்டுமே!