பதிவு செய்த நாள்
05
டிச
2019
05:12
புதுடில்லி: சபரிமலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, பெண் தாக்கல் செய்துள்ள மனு மீது, உச்ச நீதிமன்றத்தில், அடுத்த வாரம் விசாரணை நடக்கிறது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்ல, 10 வயது முதல், 50 வயதுகுட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பரில், சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என, தீர்ப்பளித்தது. இதற்கு, அய்யப்ப பக்தர்கள் உட்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
உத்தரவு: இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, நவ., 14ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், சபரிமலையில் அய்யப்பனை வழிபட, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு தொடரும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.இந்நிலையில், சபரி மலைக்கு வரும், 10 வயதுக்கு மேல், 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என, கேரளாவில் ஆளும், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு தெரிவித்தது. இதையடுத்து, சபரி மலையில், மண்டல கால பூஜைகள் துவங்கிய நிலையில், சபரிமலைக்கு சென்ற, 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சிலர், பாதுகாப்பு காரணங்களை கூறி, திருப்பி அனுப்பப்பட்டனர்.
அடிப்படை உரிமை: இந்நிலையில், பெண் ஒருவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்ெவஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், சபரிமலையில் அய்யப்பனை வழிபட, அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படவில்லை. இது அடிப்படை உரிமைகளை மீறிய செயல். மேலும் என்னை, சபரிமலைக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன், உச்ச நீதிமன்றத்திலிருந்து உத்தரவு வாங்கி வா என கூறி, போலீசாரும், அதிகாரிகளும் அவமானப்படுத்தினர். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீது, அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என, நீதிபதிகள் தெரிவித்தனர்.