பதிவு செய்த நாள்
06
டிச
2019
11:12
திருவண்ணாமலை: மகா தீபத்தன்று, முதலில் வரும், 2,500 பேர் மட்டுமே, மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர் என, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருவண்ணாமலையில், 10ம் தேதி, மகா தீபம் ஏற்றப்படுகிறது. அன்று, மலை மீது ஏற, முதலில் வரும், 2,500 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.மாவட்ட நிர்வாகம், போலீசார், வருவாய் துறை மற்றும் கோவில் நிர்வாகம் ஒத்துழைப்புடன், அன்று காலை, 6:00 மணிக்கு, சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 2,500 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும்.அனுமதி கோரி வருவோர், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களில், ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.மேற்கு கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே, மலை ஏற வேண்டும். தண்ணீர் பாட்டில் மட்டும், எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். கற்பூரம் உட்பட எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதியில்லை.பக்தர்கள் எடுத்துச் செல்லும் நெய்யை, அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், பிற இடங்களில் ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.நாளை மகா ரத தேரோட்டம்திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை, மகா ரத தேரோட்டம் நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு, பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் ரதத்தின் உச்சியில் பொருத்தக்கூடிய கலசத்திற்கு, சிறப்பு பூஜை நேற்று நடந்தது.விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மகா ரதம் ஆகிய தேர்களுக்கு, கலசம் பொருத்தப்பட்டது.