பதிவு செய்த நாள்
06
டிச
2019
12:12
குன்றத்துார்:குன்றத்துார் காத்யாயினி கோவிலில், புத்தாண்டு சிறப்பு மகேஸ்வர பூஜை நடைபெற உள்ளது.
வரும், 2020ல் புத்தாண்டு, சக்தி வாய்ந்த யோகமான நாளில் பிறக்கிறது, 21 யோகங்களில், 17 யோகமான வியதிபாதத்தில் வருவதால் சிறப்புடையதாகும்.இந்த நாளில் தான், லட்சுமியும், குபேரனும், சிவபெருமானை லிங்க வடிவம் செய்து வழிபட்டதால், ஐஸ்வர்ய சிவனாக எழுந்தருளி, அவர்களிடம் செல்வங்களை தந்து, இந்த உலகில், தர்ம பக்தியோடு வாழ்வோரு க்கு கொடுக்கும்படி அருளியதாக ஐதீகம்.
யோகமான புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, ஜன., 1ம் தேதி காலை, 7:00 மணிக்கு, குன்றத்துார் காத்யாயினி கோவில் வளாகத்தில் உள்ள, அஷ்டலட்சுமி கோபுரத்திற்கு, அத்தி மர மகா லட்சுமி, பிருந்தாவனத்திலிருந்து எழுந்தருளி, மகேஷ்வர பூஜை செய்யும் வைபவம் நடை பெறும். பின், 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, குபேர வடிவான வலம்புரி சங்கு, திரு மகள் வடிவான மகாமேரு சிவலிங்கத்துடன், பக்தர்களுக்கு விசேஷ தரிசனம் நடைபெற உள்ளது.பக்தர்கள், மகாலட்சுமி சிந்தாமணி மந்திரத்துதி படித்து, நெய் தீபமிட்டு, 27 நட்சத்திர யோகக்காரர்களும், கோவிலில் வழிபட்டு வணங்கினால், செல்வ சுப யோகங்கள் கிடைக்கும் என, கோவிலின் குமாரசிவாச்சாரியார் தெரிவித்தார்.