பதிவு செய்த நாள்
06
டிச
2019
12:12
போடி:தேனி மாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லுாரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர்கள் மூலம் திண்டுக்கல் அருகே நரசிங்கபுரம் மலையடிவாரப்பகுதியில் பெரும் கற்காலத்தை சேர்ந்த கல்பதுக்கை என அழைக்கப்படும் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இக்கல்லுாரியின் முதல்வர் ராஜகுமாரன் தலைமையில் பேராசிரியர்கள் மாணிக்கராஜ், கருப்பசாமி, ஆய்வு மாணவர்கள் ராம்குமார், நெல்லுார் அரசு கள்ளர் பள்ளி வரலாற்று ஆசிரியர் கருப்பையா ஆகியோர், கல்வெட்டுகள், கற்கள், மண்ணில் புதைந்துள்ள கற்கால பொருட்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே நரசிங்கபுரம் மேற்கு மலையடிவார பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் பெரும் கற்காலத்தை சேர்ந்த கல்பதுக்கை என அழைக் கப்படும் கல்லறைகள் கண்டுபிடித்துள்ளோம். தரையின் கீழ்பகுதியில் சதுரம் அல்லது செவ்வக வடிவில் குழியை தோண்டி அமைக்கப்படும்.பூமிக்கு அடியில் குழியை தோண்டி நான்கு பக்கங்களிலும் நான்கு கற்பலகைகளை வைத்து கல்லறை உருவாக்கி பின்னர் மேல்பகுதியில் பெரிய பலகைகளை கொண்டு மூடிவிடுவர்.
உட்பகுதியில் இறந்த மனிதனின் எலும்புக்கூடுடன் படையல் பொருட்களை வைப்பர். சில இடங்களில் இறந்தவர்களின் உடல்களை முதுமக்கள் தாழிகளில் வைத்தும், இவற்றுடன் சிறிய மட்கலங்கள் இரும்பு ஆயுதங்கள், மணிகள் வைக்கப்பட்டு புதைப்பர். பின் மண், சிறிய கற்களைக் கொண்டு மூடப்பட்டு அதை சுற்றியும் சிறிய, பெரிய கற்கள் வட்டாமான வைத்து பாதுகாப்பர்.
செவ்வக வடிவம்கோம்பைக்காடு என அழைக்கப்படும் இப்பகுதியில் ஐந்து கல்பதுக்கைகள் நீள் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ள இக்கல் பதுகை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்காக எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது இனக் குழு சண்டையில் இறந்த வீரர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். கல்லறையின் மையப் பகுதியில் 10 மீட்டர் சுற்றளவில் இயற்கையாக கிடைக்கும் சிறிய மற்றும் பெரிய உருண்டை யான கற்களை கொண்டு வட்டமாக கல் வட்டத்தில் உள்ளது போல வைக்கப்பட்டுள்ளது.
இவை பாதுகாக்கவும் அல்லது அடையாளப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கலாம்.மற்ற நான்கு கல்லறைகளும் ஒரே அறையாக நீள் செவ்வக வடிவல் அமைக்கப்பட்டிருக்கிறது. மையப்பகுதியில் இருந்து 7 மீட்டர் துாரம் சிறிய பெரிய கற்களை வட்டமாக வைக்கப் பட்டுள்ளது. இக்கல்பதுக்கைகளில் மூடு பலகைகள் இருந்திருக்கலாம்.
நினைவுச்சின்னம்: இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையை முதன் முதலில் புதிய கற்கால மக்கள் அறிந்திருந்தனர். இவை பரிணாம வளர்ச்சியடைந்து அடுத்து வந்த பெருங் கற்காலத்திலும் பின்பற்றப்பட்டு ஒரு நினைவுச்சின்மாக உருவாக்கினர். இறந்த ஆன்மாவை வழிபட்டால் குல இன விருத்திக்கும், வேட்டை தொழிலுக்கும் துணை நிற்கும் என்ற நம்பி க்கையில் வணங்கினர். கி.மு.500 முதல் கி.பி. 500 வரையிலான கால கட்டத்தில் இப்பகுதியில் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்ததை கல்பதுக்கைகள் மூலம் அறிய வருகிறது, என்றார்.