பதிவு செய்த நாள்
21
ஏப்
2012
10:04
புளியங்குடி : நெல்கட்டும்செவல் உச்சிமாகாளியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழாவை முன்னிட்டு தனிநபருக்கு மரியாதை வழங்க தீர்ப்பளித்த தென்காசி ஆர்டிஓவை கண்டித்து கிராம மக்கள் கோயில் வளாகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புளியங்குடி அருகேயுள்ளது நெல்கட்டும்செவல் கிராமம். இங்கு உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் ஊர்மக்களுக்கு பாத்தியப்பட்டது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பூக்குழி திருவிழாவும், ஆடிமாதம் பொங்கல் விழாவும் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் நடைபெறவுள்ள திருவிழாவில் தனிநபருக்கு மரியாதை வழங்க கூடாது என அப்பகுதி மக்களின் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து கடந்த வாரம் தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் வழக்கமான நடைமுறைப்படி இந்த திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒருதரப்பை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கலெக்டரின் கவனத்திற்கு என்ற தலைப்பில் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.அதில், "நெல்கட்டும்செவல் பூக்குழி திருவிழாவில் தனிநபருக்கு முதல் மரியாதை கொடுத்து திருவிழா நடத்த தீர்ப்பளித்த கோட்டாட்சி தலைவரை கண்டித்து ஊர்பொதுமக்கள் சார்பில் கோயிலில் குடும்பத்துடன் குடியேறி நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று காலை தனிநபர் அழைப்பை ஏற்றுக் கொள்ளாத ஊர் பொதுமக்களில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கோயில் முன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அப்பகுதியிலேயே சமையல் செய்தனர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் புளியங்குடி டிஎஸ்பி ஜமீம், சிவகிரி தாசில்தார் கஸ்தூரி, புளியங்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகவேல், வருவாய் ஆய்வாளர் கனகசபாபதி ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டித்துரை, அமைப்பு செயலாளர் ராமராஜ், ஒன்றிய தலைவர் சாமிதுரை, வாசு., யூனியன் கவுன்சிலர் பாண்டியராஜா உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இதில் இந்த திருவிழாவை நாங்கள் நடத்திக் கொள்கிறோம். வரும் ஆடி மாதம் நடைபெறும் பொங்கல் விழாவை மாற்றுத்தரப்பினர் நடத்திக் கொள்ளட்டும் என தெரிவித்தனர். மேலும் அதுவரையில் எங்களது போராட்டம் தொடரும் என எதிர்ப்பு தரப்பினர் தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நெல்கட்டும்செவல் ஜமீன்தாரின் வாரிசான கோமதி முத்துராணி தரப்பில் பூக்குழி திருவிழா கமிட்டி செயலாளர் முருகன், துணைத் தலைவர் ராமபாண்டியன் கூறுகையில்,இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வழக்கம் போல் சம்பிரதாயங்களின்படி நடந்து வருகிறது. திருவிழாவின் போது ஜமீன்தாரின் வாரிசுதாரர்களை கோயிலுக்கு கொடிபட்டம் சூட அழைத்து வருவது வாடிக்கை. அந்த நடைமுறையை பின்பற்றவே தென்காசி ஆர்டிஓ உத்தரவிட்டார். இதன்படி இத்திருவிழா நடத்த வேண்டுமென்பது இப்பகுதி பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக உள்ளது என்றார்.