வேலூர்: பழமையான கோவிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேலூர் சங்கரன்பாளையத்தில் மெயின் ரோடு சந்திப்பில் காம்மாட்சி அம்மன் கோயில் உள்ளது. 75 ஆண்டு பழமையான இக்கோவிலுக்கு 1942ம் ஆண்டு காந்தி வந்த போது விநாயகர் சிலையை கொடுத்தார். அங்கு அரசமரம், வேப்பமரம் நட்டார். அவரது நினைவாக அந்த மரங்களுக்கு அடியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடக்கிறது. கடந்த நான்கு ஆண்டுக்கு முன் ஹிந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கோவில் சார்பில் டிரஸ்டி அமைத்து பராமரித்து வருகின்றனர். வேலூர் - திருவண்ணாமலை சாலையை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். இதற்காக ரோட்டுக்கு அருகில் உள்ள இக் ÷காவிலை இடித்து விட்டு வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்த வரும்படி அப்பகுதி மக்களுக்கு வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கடந்த19ம் தேதி அழைப்பு வந்தது. அதிர்ச்சி அடைந்த கோவில் அறங்காவலர் குழு தலைவர் சண்முகம் தலைமையில் வேலப்பாடி, சங்கரன்பாளையம், சாயிநாதபுரத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் நேற்று (ஏப்.,20) வேலூர் கலெக்டர் அஜய் யாதவை சந்தித்து கோவில் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.