பதிவு செய்த நாள்
21
ஏப்
2012
10:04
திருநெல்வேலி : மக்களுக்காகவும், உலக நன்மைக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஆதிசங்கரர். 32 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்த ஆதிசங்கரர் செய்த உதவிகள் யாராலும் மறக்க முடியாதது, மறக்க கூடாதது என பாளை., தியாகராஜநகரில் நடந்த நிகழ்ச்சியில் சிருங்கேரி பீடாதிபதி பாரதீ தீர்த்த மகா சுவாமிகள் ஆசியுரை வழங்கி பேசினார். கர்நாடக மாநிலம் சிருங்கேரி சங்கர மடத்தின் 36வது பீடாதிபதி பாரதீ தீர்த்த மகா சுவாமிகள் நெல்லையில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளார். 10 நாட்கள் நடைபெறவுள்ள பூஜையில் பங்கேற்பதற்காக பாளை., தியாகராஜநகர் வந்த சுவாமிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கி சிருங்கேரி சுவாமிகள் பேசியதாவது: ஆதிசங்கரர் நம் நாட்டில் அவதரித்து ஜனங்களுக்கு தர்மத்தையும், வேதத்தின் தத்துவத்தையும் போதித்துள்ளார். சனதான தர்மத்தின் தத்துவங்களை விளக்கியுள்ளார். ஆதி சங்கரர் அவதாரத்திற்கு முன்பு ஜனங்களுக்கு தர்மத்தை பற்றிய, வேதத்தை பற்றிய சரியான ஞானம் இருக்கவில்லை. ஏனெனில் பலர் தர்மத்தையும், வேதத்தையும் விபரீதமாக பூஜித்து கொண்டு இருந்தனர். வேத விருத்தமான, தர்ம விருத்தமான சிந்தாந்தம் அந்த காலத்தில் இல்லை. வேதாந்தம் என்றால் யாருக்கும் தெரியாத நிலைமை இருந்தது. இந்த நிலையில் தான் ஆதிசங்கரர் நம் நாட்டில் அவதரித்து தர்மத்தையும், வேதத்தையும் போதித்தார். ஆதிசங்கரர் 32 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார். அவர் நமக்கு செய்த உதவிகள் பரம அற்புதமானது. யாராலும் மறக்க முடியாத, மறக்க கூடாத உதவிகளை நமக்கு செய்து கொடுத்துள்ளார். ஆதிசங்கரர் 8 வயதில் வேதமும், 12 வயதில் சாஸ்திரமும், 16 வயதில் பாஷ்யமும் முழுவதையும் கற்றுத் தேர்ந்தார். எவ்வளவு பெரிய புத்திசாலி என்றாலும் ஒரு வேதம் கற்று முடிக்கவே 12 ஆண்டுகள் ஆகும். ஆனால் ஆதிசங்கர் சகல வேதங்களையும் கற்றவர். அதனால் தான் அவரை சர்வ யக்ஞர், ஈஸ்வர அவதாரம், சாட்சாத் பரமேஸ்வரன் எனச்சொல்வது நூற்றுக்கு நூறு சாலப்பொருந்தும். பாலப்பருவத்திலேயே சன்யாசம் பெற்று, ஆசைகளை துறந்தவர் ஆதிசங்கரர். உலக மக்களுக்கு உபகாரம் செய்ய வாழ்க்கை நடத்தியவர் சங்கரர். உலக நன்மைக்காக உபகாரம் செய்தவர். அவர் அவதாரம் எடுக்காவிட்டால் தர்மத்தை, வேதத்தை பற்றி தெரிந்து கொள்ள நமக்கு அவகாசம் கிடைத்திருக்குமா. ஒரு வீட்டில் தந்தை நல்வழியில் நடந்தால் தான் மகனும் அந்த வழிமுறைகளை கடைபிடிப்பார். ஆதிசங்கரரின் புத்தி சக்தி அபாரமானது. மகான் சங்கரர் சனதான தர்மத்தை, வேதத்தை நமக்கு போதித்தவர். தன்னுடைய வாழ்க்கையை உலக மக்களுக்காகவும், உலகத்திற்காகவும் அர்பணித்தவர். அத்வைதம் போதித்தவர். அத்வைதம் படித்தால் தான் முக்தி அடைய முடியும். அதற்கு மனது சுத்தமாக இருத்தல் வேண்டும். வேதம், தர்மத்தை கற்றுக் கொண்டால் அதற்கான தகுதி ஏற்படும். ஆதிசங்கரர் அவதரித்த சங்கர ஜெயந்தியை நாம் சிறப்பாக கொண்டாடவேண்டும். தியாகராஜநகரில் சங்கர ஜெயந்தி விழா 9 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதில் வேத வித்வான்களின் வேத பாராயணம் நடக்கிறது. இதை கேட்பதற்கே நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். சங்கர ஜெயந்தியில் அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும்.இவ்வாறு சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமிகள் பேசினார்.