பதிவு செய்த நாள்
21
ஏப்
2012
04:04
மதுரை மீனாட்சி அம்மனை அலங்கரிக்கும் ராயர் கிரிடம்: மதுரை மீனாட்சி அம்மன், சுவாமிக்கென பாண்டிய மன்னர்கள் காலம் தொட்டு பலர் வழங்கிய பவளம், முத்து, வைரம் பதித்த ஏராளமான நகைகள், கிரீடங்கள், பதக்க மாலைகள் இருந்தாலும், திருக்கல்யாணத்திற்கென பிரத்யேக ஆபரணங்கள் அணிவிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. மணமகன் சுந்தரேஸ்வரருக்கு பவளங்கள் பதித்த கல்யாண கிரீடமும், அம்மனுக்கு ராயர் கிரீடமும் அணிவிக்கிறார்கள், இதில் ராயர் கிரீடம் ஹம்பி நகரத்து மன்னர் ராயர் வழங்கியதாம். இதனாலேயே பட்டாபிஷேகத்தின்போதும் இந்த கிரீடம் அம்மனை அலங்கரிக்கிறது. அதேபோல் உள்ளங்கை அளவுக்கு வட்டமான நீல நாயகப் பதக்கம், பார்ப்பவரை ஈர்ப்பது நிச்சயம். இதன் மதிப்பு எவ்வளவு என ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பிய போது, மதிப்பிட முடியாத பதக்கம் என்ற ஆச்சரர்ய தகவலோடு, பதக்கம் திருப்பி வந்ததாம்.
இதுதவிர, பச்சைக்கல் தங்கப் பதக்கம், நளப்பதக்கம் என பத்து நாள் திருவிழாக்களில் ஒவ்வொரு நாளும் அம்மனையும், சுவாமியையும் விதவிதமான ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. எந்தத் திருவிழாவிற்கு எந்த ஆபரணம், கிரீடம் என, அலங்கார பட்டர்கள் ஆலோசித்து, சூட்டுகிறார்கள். மேலும், திருக்கல்யாணத்தன்று மட்டும் அம்மனுக்கு பித்தத்தகடு அணிவிக்கப்படுகிறது. அதாவது அம்மனின் பின்பகுதியில் பொருத்தப்படும் கவசங்கள். இதுமட்டுமல்லாமல், பொட்டுக்காரைத் தாலி, கல் இழைத்த தாலி, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சித்தர் பதக்கம், அம்மனுக்கு தங்கச்சடை சிங்காரம் என ஆபரணங்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு. மணநேரத்து பட்டுச்சேலை உபயம் ஆகவோ, கோயில் நிர்வாகம் சார்பிலோ சாத்தப்படுகிறது. கல்யாணத்திற்கு வருவோரை வரவேற்க, சந்தனக்கும்பா, பன்னீர்ச் சொம்பு, நெய் ஊற்றி வேள்வி வளர்க்க தங்கத் தேக்கரண்டி என திருவாபரணம் எல்லாமே தங்கத்தில் இருப்பது திருக்கல்யாணத்தின் சிறப்பு.
சாரம் அமைத்த சங்கதி தெரியுமா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களிலேயே மிக உயரமானது... 160 அடி உயரம்... 108 அடி நீளம்... 67 அடி அகலம்... என பிரம்மாண்டமாக காட்சியளிப்பது தெற்குக்கோபுரம். 1511 சுதைகள் கொண்ட இக்கோபுரத்தின் உச்சியில் இருபுறமும் உள்ள யாளியின் கண்களின் குறுக்களவு மட்டும் எவ்வளவு தெரியுமா. இரண்டரை அடி. 1960ல் கும்பாபிஷேகப்பணிகள் நடந்தபோது, இக்கோபுரத்தில்தான் முதன்முதலாக திருப்பணி துவங்கப்பட்டது. இதற்காக கோபுரத்தில் சாரம் கட்டவே நான்கு மாதங்களாகின. சாரங்களை இணைக்க லட்சம் முடிச்சுகள் போடப்பட்டன. இந்த கும்பாபிஷேகத்தின் போது தான், கோபுர வாசல் விரிவுபடுத்தப்பட்டு, ஆடிவீதிக்கு எளிதாகச்செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டது. இக்கோபுரத்தை 9 நிலைகளுடன், 1447ல் கட்டியவர் சிராமலை செவ்வந்திமூர்த்தி என்பவர். இவர் செல்வந்தரா, மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரா என விபரம் தெரியவில்லை. இக்கோபுரத்தை கட்டிய பின், 80 ஆண்டுகள் கோயிலில் புதிய கோபுரங்கள் கட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து செவ்வந்திமூர்த்தியால் முக்குறுணி விநாயகர் சன்னதி முன் உள்ள 5 நிலை கோபுரம், அம்மனுக்கு தங்கவிமானம், புட்டுத்தோப்பு மண்டபம் கட்டப்பட்டது. மதுரை ராணியாக முடிசூடிக்கொள்ளும் மீனாட்சியம்மன், மறுநாள் அஷ்டதிக் பாலகர்களை வெல்ல இந்திர விமானத்தில் புறப்படுவார். கிழக்கு திசையில் இந்திரனையும், அக்னி மூலையான விளக்குத்தூண் சந்திப்பில் அக்னியையும், தெற்கில் எமனையும், நிருதி திசையான தெற்கு - மேலமாசிவீதி சந்திப்பில் நிருதியையும், மேற்கில் வாயுவையும், வடக்கில் குபேரனையும் வென்று வடக்குமாசி - கீழமாசி வீதி சந்திப்பிற்கு வருவார். ஈசான மூலையான அங்கு சுவாமியுடன் அம்மன் போர் புரிய, சுவாமி வெற்றி பெறும் நிகழ்ச்சி நடக்கும்.
மீனாட்சி திருக்கல்யாண துளிகள்:
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின்போது மணமக்கள் வேடமிட்ட பட்டர்களுக்கு பாலும், பழமும் கொடுக்கப்படும். பின், அவர்கள் யானை மீது சித்திரை வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அவரவர் வீடுகளில் சகலமரியாதையுடன் இறக்கிவிடப்படுவது காலம் காலமாக நடக்கிறது. திருமணத்தில், நிகழ்ச்சி முடியும் வரை மணமக்கள் மேடையை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு காப்பு கட்டப்படும். சுவாமிக்கு தேவஸ்தானம் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் சார்பில் பரிவட்டமும், அம்மனுக்கு பட்டு வஸ்திரமும் சாத்தப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடக்கும் நாட்களில் தினமும் அம்மனையும், சுவாமியையும் மதுரை மேலமாசிவீதி - நேதாஜி ரோடு சந்திப்பில் பூமழை தூவி அந்தரத்தில் பறக்கும் இரு பொம்மைகள் வரவேற்கும். இது சிலருக்கு விளையாட்டாக தெரியும். ஆனால் இதில் ஐதீகம் மறைந்திருக்கிறது. வேதங்களில் மானுடம், ராட்சசன், தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள், வானரர்கள் என 7 வர்க்கங்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில், கந்தர்வர்கள் என்பவர்கள், மானுடர்களுக்கும், தெய்வங்களுக்கும் தொடர்பாளர்களாக இருப்பவர்கள். கின்னரர்கள் என்பவர்கள் தேவர்களின் படைவீரர்கள். கிம்புருஷர்கள் என்பவர்கள் ரிஷிகள், வானரர்கள் என்பவர்கள் மனிதர்களின் ஆதிநிலையை குறிப்பிடுபவர்கள். மனிதர்கள் சார்பில், இறைவனுக்கு மாலை அணிவிக்கும் வகையில்தான், கந்தர்வர்கள் என்றழைக்கப்படும் அந்த பொம்மைகள், சுவாமி, அம்மன் தொடர்பான ஓவியங்களில் மாலையுடன் பறப்பது போல் இருப்பதை பார்த்திருப்போம்.
மீனாட்சி அம்மனுக்கும், சுவாமி சுந்தரேஸ்வரருக்கும் மன்னர் திருமலை நாயக்கர் கொடுத்த, விலை மதிப்புள்ள கற்கள் பதித்த நகைகளையும், எல்லா விழாக்களிலும் அணிவித்தாலும், தேரோட்டத்தின்போது மட்டும் அணிவிப்பதில்லை. அசைந்து ஆடி வரும் தேரின் அதிர்வு காரணமாக கற்கள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த நடைமுறை உள்ளது. இதனால் மாலை 3 மணிக்கு மேல் கோயிலில் இருந்து கீரிடம் மற்றும் தங்க நகைகள் ஊர்வலமாக எடுத்து வந்து தேர்களில் வீற்றிருக்கும் சுவாமிக்கும், அம்மனுக்கும் அணிவிக்கப்படும்.
மதுரை ராணியாக முடிசூடிக் கொள்ளும் மீனாட்சியம்மன், மறுநாள் அஷ்டதிக் பாலகர்களை வெல்ல இந்திர விமானத்தில் புறப்படுவார். கிழக்கு திசையில் இந்திரனையும், அக்னி மூலையான விளக்குத்தூண் சந்திப்பில் அக்னியையும், தெற்கில் எமனையும், நிருதி திசையான தெற்கு - மேலமாசிவீதி சந்திப்பில் நிருதியையும், மேற்கில் வாயுவையும், வடக்கில் குபேரனையும் வென்று வடக்குமாசி - கீழமாசி வீதி சந்திப்பிற்கு வருவார். ஈசான மூலையான அங்கு சுவாமியுடன் அம்மன் போர் புரிய, சுவாமி வெற்றி பெறும் நிகழ்ச்சி நடக்கும்.