பதிவு செய்த நாள்
11
டிச
2019
11:12
முண்டாசுக் கவிஞன் பாரதியின் பிறந்த தினம் இன்று. கனல் தெறிக்கும் கவிதைகளைக் கொட்டி மக்களைத் தட்டி எழுப்பியவன். பாரதியைக் கவிஞன் என்ற ஒற்றை வார்த்தையில் சிறை பிடிக்காது உற்று நோக்கின் ஆசிரியராக, இதழியலாளராக, இயற்கை ஆர்வலராக, பெண்ணியச் சிந்தனையாளராக, கல்வியாளராக, ஜாதி எதிர்ப்பாளராக, மொழிபெயர்ப்பாளராக, அறிவியலாளராக எனப் பன்முகத்தன்மைகளை உணரலாம். ஆசிரியராக கலைமகள் எனப்பொருள்படும் ‘பாரதி’ பட்டம் பெற்ற சுப்பிரமணிய பாரதி அக்கலைமகளின் அருளால் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பல்வேறு காலகட்டங்களில் தேசபக்தி பாடல்கள், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி என தரமான படைப்புகளைத் தந்துள்ளார்.
கல்வியாளராக
நாட்டின் நலமும் வளமும் கல்வியினாலேயே செழிப்படையும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் பாரதி. ‘ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்’ எனும் போது தொழிற்கல்வியையும், ‘ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ எனும்போது உடற்கல்வியையும் ‘வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்’ எனும்போது வானியல் கல்வியையும் கடலியல் கல்வியையும்,‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி’ எனும் போது பெண் கல்வியையும் வலியுறுத்திய பாரதி சிறந்த கல்வியாளர் என்பதில் மாற்றுக் கருத்துண்டோ?
விடுதலை வீரராக
ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக அனல் பறக்கும் புரட்சிகரமான கவிதைகளை எழுதியும் பேசியும் மக்கள் மனதில் விடுதலை உணர்வைத் துாண்டினார். ‘என்று தணியுமிந்த சுதந்திர தாகம்? என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்?’ என பாடி சுதந்திர தீயை கொழுந்துவிட்டு எரியச்செய்தார். சுதந்திர போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபொழுதே நாம் சுதந்திரம் பெற்றுவிட்டது போன்று கனவு கண்டவர் பாரதி. ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ மென்று’ என பாடியதே பின்னாளில் மெய்யானது என்பதில் இருந்து பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பதை உணரமுடிகிறது. பெண்ணியச் சிந்தனையாளராக ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் என்பதில் உறுதியாய் இருந்த பாரதி, ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என வெகுண்டெழுகிறார். ‘அச்சமும் நாணமும் நாய்கட்கு வேணுமடா’ என பாரதி கோபத்தைக் கொப்பளிக்கிறார். சூதில் மனைவியை வைத்து இழந்த தருமனைச் சாட நினைத்த பாரதி அதனை வீமன் வாயிலாக நிறைவேற்றுகிறார். ‘இது பொறுப்பதில்லை – தம்பி எரிதழல் கொண்டு வா கதிரை வைத்திழந்தான் -அண்ணன் கையை எரித்திடுவோம்’ என்ற பாரதி, இன்றைய சூழலில் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளைக் கண்டிருந்தால்... உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
பன்மொழி வல்லுநராக
தமிழின் மீது தீராப்பற்று கொண்ட போதிலும் பிற மொழிகளில் தேர்ந்தவர். வடமொழியிலிருந்து கீதை, பதஞ்சலியோக சூத்திரம், வேதரிஷிகளின் கவிதை ஆகியவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த பாரதி ‘யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ என்று கூறுவதில் இருந்து தமிழின் மீது அவருக்குள்ள காதலையும், பன்மொழிப்புலமையையும் அறியலாம்.
அறிவியலாளராக
1909ல் இந்தியா என்னும் பத்திரிகையில் திசை எனும் தலைப்பில் கவிதை எழுதியுள்ளார். அதில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு, ஒரு விநாடிக்கு ஒளி செல்லும் தொலைவு போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார். ‘ஒருநொடிப் போதி லோர்பத்து ஒன்பதா யிரமாங் காதம் கதிரென வகுப்பா ரான்றோர் கருதவும் அரிய தம்ம! கதிருடை விரைவும் அது பருதியின் நின்றோர் எட்டு விநாடியிற் பரவு மீங்கே’ என கவிதையில் ஒளியின் வேகம் 19000 காதம் மற்றும் சூரியனிலிருந்து பூமிக்கு ஒளி வர எட்டு விநாடிகள் ஆகின்றன போன்ற அறிவியல் செய்திகளைப் பதிவு செய்துள்ள பாரதியின் அறிவியல் புலமை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
நாட்டுப்புறவியலாளராக
எழுதா இலக்கியங்களான நாட்டுப்புற இலக்கியங்களில் உள்ள இயற்கையோடு இயைந்த வாழ்வு பாரதியின் உள்ளத்தைக் கவர்ந்திருந்தது. அவற்றில் மனதைப் பறிகொடுத்த அவர், ‘ஏற்ற நீர்ப் பாட்டின் இசையினிலும் - நெல்லிடிக்கும் பொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடலார் பழகு பலபாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் மனதைப் பறிகொடுத்தேன் பாவியேன்’ என குயில்பாட்டில் அவர் எழுதியதைக் காணும்போது அவரை சிறந்த நாட்டுப்புறவியலாளர் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
மனிதநேயராக
மனிதநேயம் என்பது பாகுபாடின்றி, உற்ற நேரத்தில், உரியவகையில் கைம்மாறு கருதாமல் உதவும் மனப்பாங்காகும். மனிதநேயத்தின் மறுவடிவாக விளங்கிய பாரதி, ‘வயிற்றுக்குச் சோறிடவேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என மக்களின் பசியைப் போக்கிட நினைத்தவன். ‘காக்கை குருவி எங்கள் சாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என சொல்லி, செல்லம்மாள் சமையலுக்கு வைத்திருந்த அரிசியைப் பறவைகளுக்கு வாரி இறைத்து பெருமிதம் கொண்டவன். மனித நேயத்துக்கு ஒரு மகத்தான உதாரணம் பாரதி என்றால் மிகையில்லை.
இயற்கை ஆர்வலராக
இயந்திர உலகில் வாழும் மனிதன், இயற்கையை ஏறெடுத்தும் பார்க்காமல் செயற்கையான வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றான். பாரதியோ வறுமையினால் வாடிய போதும் தம் வாழ்வினை இயற்கையினைக் கொண்டு மீட்டெடுக்க முற்படுகிறான். ‘இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து
காற்று இனியது தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது
ஞாயிறு நன்று திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன’
எனும் போது இயற்கை என்பது இனிய வரம் என்றும் அதை நன்கு உணர்ந்தவர் பாரதி என்றும் அறியமுடிகிறது. பாரதியின் பிறந்த தினமான இன்று அவனது கனவுகளை நனவாக்குவோம். பாரதி கவிதைக்குத் தேர் அமைப்போம். ஊர் கூடி நின்று நாம் இழுப்போம். வாருங்கள் வடம் பிடிப்போம். வரலாற்றில் இடம் பிடிப்போம்.