பதிவு செய்த நாள்
11
டிச
2019
01:12
சிங்கம்புணரி: பிரான்மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இங்கு குன்றக்குடி ஆதினத்திற்கு சொந்தமான மங்கைபாகர், தேனம்மை கோயில் உள்ளது. 2500 அடி உயர இயற்கை சுயம்புலிங்கமாய் காட்சியளிக்கும் இம்மலை அடிவாரத்தில் 3 நிலைகளில் சிவாலயம் உள்ளது. பாதாளத்தில் திருக்கொடுங்குன்ற நாதர் குயிலமுத நாயகி சன்னதியும், பூமி தளத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி, வடுகபைரவர் சன்னதிகளும், ஆகாய தளத்தில் திருமண கோலத்தில் மங்கைபாகர், தேனம்மை சன்னதியும் உள்ளன. மலை உச்சியில் விநாயகர், முருகன் சன்னதிகளும் உள்ளன. திருக்கார்த்திகை தினமான நேற்று தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது. முதலில் காலை 8:00 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பிறகு மலை உச்சியில் உள்ள பாலமுருகன் சன்னதியில் வைக்கப்பட்டுள்ள கொப்பரையில் திருமுருகன் பேரவை சார்பாக மலை தீபம் மாலை 5:30 மணிக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து அருகில் உச்சிப்பாறையில் மலை தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மலை உச்சிக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாத பெருமான்கோயில் மலையில், திருக்கார்த்திகை விழாவையொட்டி கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்குநடை திறக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள்சண்முகநாத பெருமானை அதிகாலை முதலே வணங்கி சென்றனர். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்ஆராதனை நடந்தது. சுவாமி, பகல் 1:00 மணிக்குமலையிலிருந்து கீழிறங்கி கார்த்திகைதீப மண்டபத்தை வந்தடைந்தார்.
மாலையில், குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பரணி தீபம் ஏற்றி,சொக்கப்பனை கொளுத்தினார். பின்பு, கார்த்திகை தீப மண்டபத்தில்சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டது. மண்டபத்திற்குமுன்பு, சுவாமி மலையை நோக்கியபோது, மலையில் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டது.
தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சண்முக அர்ச்சனை ஆறு வகை அன்னதானம் நடந்தது. மாலையில் சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜையை தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தேவகோட்டை தண்டாயுதபாணி மலைக்கோவிலில் திருகார்த்திகையை முன்னிட்டு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலையில் தண்டாயுதபாணிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு மலைக்கோவிலின் கோபுரம் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.