பதிவு செய்த நாள்
12
டிச
2019
03:12
புதுச்சேரி:கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, புதுச்சேரி வேதபுரீஸ்வரர் உள்ளிட்ட பிரதான கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
கார்த்திகை தீப திருவிழாவின்போது, வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றியும், கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். கல்பதரு, தேவமரம் என்று அழைக்கப்படும் பனை மரத்தைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால் முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காக தீபத் திருநாளில் கோவில்களில் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.அந்த வகையில், கார்த்திகை தீபத் திருநாளான நேற்றுமுன்தினம் மாலை புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில், பாரதி வீதி காமாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பொதுமக்கள் எரிந்த சாம்பலை நெற்றியில் பூசிக்கொண்டதோடு, வீட்டிற்கும் கொண்டு சென்றனர்.
வில்லியனுார்: கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் காலை பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை பஞ்சமூர்த்தி புறப்பாட்டை தொடர்ந்து கோவில் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.