திருப்பரங்குன்றம், :திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. இங்கு டிச., 2ல் துவங்கிய விழாவில் தினமும் ஒரு வாகனத்தில்சுவாமி, தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தனர். நேற்று முன் தினம் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.தீர்த்த உற்ஸவத்தையொட்டி உற்ஸவர் சன்னதியில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, அஸ்தரதேவர் எழுந்தருளினர். கொடியேற்றம் துவங்கி நேற்று காலைவரை யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரால், உற்ஸவர்களுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு புஷ்ப அலங்காரமாகி தீபாராதனைகள் நடந்தன. உச்சிகால பூஜை முடிந்து சுவாமி, அம்மன் சரவணப்பொய்கையில் எழுந்தருளினர். அங்கு ஆறுமுக சுவாமி சன்னதியில் யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து அஸ்தரதேவருக்கு சரவணப்பொய்கையில் தீர்த்த உற்ஸவம் நடந்தது.