நடை சாத்திய பிறகு கருவறைக்குள் ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: பரவும் வீடியோ
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2019 10:12
அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் ஊஞ்சல் ஆடியதாக வீடியோ பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு 1௦ம் தேதி இரவு 8:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. அப்போது செயல் அலுவலர் அறையில் உள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் மானிட்டரில் அம்மன் கருவறையில் பொருத்தியிருந்த ஒரு கேமராவில் வெள்ளை கலரில் ஒரு உருவம் கருவறை முன்புள்ள திரைச்சீலையில் அசைவதை பார்த்தனர். திரையில் தீப்பற்றி விட்டதோ என நினைத்து செயல் அலுவலர் சரவணன் அறநிலையத் துறை ஊழியர்கள் காட்சியை தொடர்ந்து பார்த்தனர். அது தீயில்லை என்பதும் ஏதோ ஒரு உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்றும் தெரிந்தது.
பெண் உருவம் கருவறைக்குள் செல்வதும் தொடர்ந்து கருவறை முன்புள்ள திரைச்சீலையை தொடுவதுமாக இருந்தது. இரவு 8:30 மணிக்கு தென்பட்ட உருவம் 10:45 மணிக்கு மறைந்தது. ஏறக்குறைய 2:15 மணி நேரம் இந்தக் காட்சியை செயல் அலுவலர் உள்ளிட்டோர் பார்த்து திக்பிரமையுடன் வீடு சென்றனர். மறுநாள் காலை கோவில் நடையை திறந்தனர். செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கருவறையில் பொருத்தியிருந்த கேமரா அருகில் பூச்சி சிலந்திகள் கூடுகட்டியுள்ளதா என பார்த்தபோது அப்படி எதுவுமில்லை. இந்நிலையில் ஊஞ்சலாடியது பத்ர காளியம்மன் உருவம் தான் என வீடியோ பரவி வருகிறது.
அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது இதுபோன்ற நிகழ்வு கோவிலில் இதுவரை நடந்ததில்லை. நிகழ்வுக்குப் பின் நாங்கள் தொடர்ந்து கேமராவை கண்காணித்து வருகிறோம். மீண்டும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றனர்.