காஞ்சிபுரம்: மதுராந்தகத்தில் கோவில் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, பூமிக்கடியிலிருந்து பழமையான சிவலிங்கம் சிலை கண்டெடுக்கப்பட்டது. மதுராந்தகம், தேரடி தெரு சூரக்குட்டை என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது. இந்நிலம் பலரிடம் கைமாறி தற்போது உதயகுமார் சுவாமிகள் என்பவரிடம் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளம் தோண்டியபோது, நீளமான சுண்ணாம்புக்கல் சுவர் கண்டெடுக்கப்பட்டது. இங்கு முன்பு சிவன் கோவில் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.இந்நிலையில், உதயகுமார், இந்த இடத்தில் அபிராமி உடனுறை பிரமேஸ்வரர் என்கிற காலபைரவர் கோவில் கட்ட முடிவெடுத்து, கடந்த 2007ம் ஆண்டு பூமி பூஜை நடத்தினார். கோவில் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் நிலையில், நேற்று காலை 11 மணிக்கு, கருவறை அமைய உள்ள இடத்தில் பள்ளம் தோண்டினர்.அப்போது, பூமிக்கடியில் கருங்கல்லால் ஆன சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.அவற்றை பூமியிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். சிவலிங்கம் இரண்டரை அடி உயரமும், ஒன்றேகால் அடி அகலமும் கொண்டதாக இருந்தது. இத்தகவல் வேகமாக பரவியதால் சுற்றுப்பகுதி மக்கள் வந்து சிவலிங்கத்தை பார்த்துச் சென்றனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.