பதிவு செய்த நாள்
16
டிச
2019
11:12
சபரிமலை: சபரிமலையில், நடப்பு மண்டல சீசன், திருப்திகரமாக இருப்பதாகவும், இதுவரை, 104 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்தார்.
சபரிமலையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:நடப்பு மண்டல சீசனில், தேவசம் போர்டு, அனைத்து அரசு துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளும், ஒருங்கிணைப்பும் சிறப்பாக உள்ளது. பக்தர்கள் எந்த சிரமத்துக்கும் ஆளாகாமால், தரிசனம் செய்து செல்கின்றனர்.அரவணை, அப்பம் விற்பனை, பம்பையில் ஆரம்பிக்கப்பட்டது, பக்தர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. தேவசம் போர்டின் அன்னதானம், துப்புரவு பணிகள் சிறப்பாக உள்ளன.டிச., 14 வரை, வருமானம், 104 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த ஆண்டை விட, 40 கோடி அதிகம். அவரணை விற்பனையில் மட்டும், 41 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு, இது, 23 கோடியாக இருந்தது. காணிக்கையாக, 35 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு, 25 கோடியாக இருந்தது. இந்த சீசனில், 5 கோடி ரூபாய் மதிப்பிலான நாணயங்கள், எண்ணப் படாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எடை போட்டு, நாணயங்களின் தொகையை நிர்ணயிப்பது பற்றி, ஆலோசனை நடந்து வருகிறது. இதற்காக, கோர்ட்டில் அனுமதி பெறப்படும்.பம்பையில், நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால், பக்தர்கள் குளிக்க சிரமப்படுவது பற்றி, பத்தணந்திட்டை மாவட்ட கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அணைகளை திறக்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
ஒரு லட்சம் பக்தர்களுக்கு சிகிச்சை: சபரிமலை செல்லும் வழிகளில், பம்பை, நீலிமலை, அப்பாச்சிமேடு, சன்னிதானம், சரல்மேடு, நிலக்கல், பத்தணந்திட்டை, ரான்னி பெருநாடு, எருமேலி, செங்கன்னுார் ரயில் நிலையம், பந்தளம் ஆகிய இடங்களில், கேரள சுகாதாரத் துறை சார்பில், மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மருத்துவமனைகளில், டிச., 12 வரை, 1.08 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 581 பேர், கோட்டயம் மருத்துவக் கல்லுாரிக்கு, மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 176 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். எட்டு பேர், பாம்பு கடித்து வந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். 12 பேர் இறந்துள்ளனர். பம்பை முதல் சன்னிதானம் வரை, 16 அவசர உதவி மையங்கள், ஆண் நர்ஸ்களுடன் செயல்படுகின்றன. சரல்மேடு தவிர்த்து, மீதமுள்ள மையங்களில், இதய நோய்க்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்படுகிறது. பம்பை, நிலக்கல், அப்பாச்சிமேட்டில் ரத்த பரிசோதனை நிலையம், பம்பை, சன்னிதானத்தில் எக்ஸ்ரே வசதியும் உள்ளது. அனைத்து மையங்களிலும், வென்டிலேட்டர் வசதி உள்ளது. பம்பையில், அனைத்து நவீன வசதிகளும் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. 11 ஆம்புலன்ஸ்கள், தயார் நிலையில் உள்ளன. இவற்றில் மூன்றில், வென்டிலேட்டர் வசதி உள்ளது.