சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். வருமானம் ரூ.100 கோடியாக அதிகரித்தது.
மண்டல காலம் தொடங்கிய பின்னர் கடந்த இரண்டு நாட்களாக 24 மணி நேரமும் இடைவெளி இல்லாமல் பக்தர் கூட்டம் சபரிமலையில் அலைமோதுகிறது. டிச.12 இரவு தொடங்கிய பக்தர்களின் இடைவிடாத கூட்டம் 48 மணி நேரத்தை கடந்து நேற்றும் தொடர்ந்தது. பெரியநடைப்பந்தலில் இருந்து மரக்கூட்டம் வரை நீண்ட வரிசை காணப்பட்டது.
பக்தர்கள் பல மணி நேரம் காத்து நின்று தரிசனம் செய்தனர். வரும் நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மண்டல காலம் தொடங்கி 27 நாட்களில் 16 லட்சம் பக்தர்கள் தரிசனம்செய்துள்ளனர். பக்தர்கள் அதிகரித்ததால் சீசனில் வருமானம் ரூ.100 கோடியை கடந்தது. சபரிமலையில் நேற்று வெயில் இல்லை. மழை சூழல் இருந்தாலும் பெய்யவில்லை.