நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2012 10:04
நாகப்பட்டினம் : நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்காவில் 455ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் நேற்றிரவு துவங்கியது. நாகை அடுத்த நாகூரில் பழமையான ஷாஹூல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவின் 455ம் ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு, நேற்று காலை 11 மணிக்கு நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது. தர்காவில் உள்ள ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள், மேளதாளத்துடன் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஏற்றப்பட்டு, நாகையில் 40 வீதிகள், நாகூரில் 14 வீதிகள் வழியாக வலம் வந்து, பின்பு அலங்கார வாசலை வந்தடைந்தது. ரதங்களில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டு, தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டதும், தர்கா பரம்பரை டிரஸ்டி கலிபா மஸ்தான் சாகிப், துவா ஓதிய பின், தர்காவில் உள்ள ஐந்து மினவராக்களிலும் கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து, தர்காவில் நடந்த சிறப்புத் தொழுகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர்.