பதிவு செய்த நாள்
23
ஏப்
2012
11:04
பிரபல கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன், திருப்பதியில், பக்தர்களுக்கு உணவு பரிமாறி, பக்தர்களுடன் அமர்ந்து உணவும் சாப்பிட்டார்.பிரபல கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன், நேற்று முன்தினம், ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி வந்தார். அவருடன், அவருடைய குடும்பத்தினரும் வந்து, பய பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் அவர் அதிகாரிகளிடம், அன்னதானம் வழங்குவதற்காக உள்ள தன்னார்வ தொண்டர்களுடன், தானும் இணைந்து, பக்தர்களுக்கு உணவு பரிமாற விரும்புகிறேன் என்றார். அதற்கு இசைவு தெரிவித்த திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அவரை நித்திய அன்னதான மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, உணவு சாப்பிட அமர்ந்திருந்த பக்தர்களுக்கு, லட்சுமணன், சாதம், பொரியல், சாம்பார், ரசம் என பரிமாறினார். தொடர்ந்து, பக்தர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், "அன்னதானம் வழங்கும் சேவையில் நான் கலந்துகொண்டதற்காக, மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சுவாமியின் பெயரால் நடைபெறும் இந்த சேவை குறித்து அறிந்ததும், அதில், ஒரு தொண்டராக பணியாற்ற முடிவு செய்தேன். இளைஞர்கள் அனைவரும், இந்த சேவையில் பெருமளவு பங்கேற்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் அவருடன், திருப்பதி தேவஸ்தான இணைச் செயல் அலுவலர் கே.எஸ்.சீனிவாச ராவ், உணவு வழங்கல் அதிகாரி சாஸ்திரி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் உடன் இருந்தனர்.