பதிவு செய்த நாள்
18
டிச
2019
12:12
உடுமலை : கோவில்களில், அதிகாலையில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாராயண பஜனையோடு, வாசலில், பூக்கோலமிட்டு, மார்கழி மாத பிறப்பை உற்சாகத்துடன் உடுமலைப் பகுதி மக்கள் வரவேற்றனர். தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதம் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாகும்.
இம்மாதத்தின் அதிகாலை பொழுதில், கோவில்களில் வழிபாடு நடத்துவது பல்வேறு நன்மைகளை தரும்.உடுமலை பகுதியில், மார்கழி மாத துவக்கத்தை வழக்கமான உற்சாகத்தோடு மக்கள் வரவேற்றனர். உடுமலை பெரியகடை வீதி நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், அதிகாலையில் பக்தர்கள், திருப்பாவை பாசுரங்களை பஜனையாக பாராயணம் செய்தபடி, வீதியுலா வந்தனர். பெரியகடை வீதி, பிரசன்ன விநாயகர் கோவில் வீதி, தளி ரோடு, வடக்கு குட்டை வீதி வழியாக திருவீதியுலா நடந்தது.
ஆர்வமுள்ள ஆன்மிக அன்பர்கள் பஜனை கோஷ்டியில் பங்கேற்கலாம் என விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.இதே போல், கிராமங்களிலும், பஜனை பாடியபடி, அதிகாலையில், பக்தர்கள் வீதியுலா சென்றனர். விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே, தண்ணீர் ஊற்றி, அருகம்புல் மாலை சாற்றி, வழிபட்டனர்.குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், தனுர் மாத சிறப்பு பூஜைகள் நேற்று துவங்கியது.
சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த ஆண்டாள் நாச்சியாரை திரளான பக்தர்கள் தரிசித்தனர். மார்கழி மாத துவக்கத்தையொட்டி, வீடுகளின் முன்பு வண்ண கோலமிட்டு, பூக்களால் அலங்கரித்தனர். சாணத்தால் பிள்ளையார் உருவத்தை உருவாக்கி, பூக்களை வைத்து வழிபட்டனர். இம்மாதம் முழுவதும், இத்தகைய வழிபாடுகள் தொடரும்.உடுமலை நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், பகல் பத்து உற்சவம் வரும், 27ம் தேதி துவங்குகிறது. அன்று முதல், ஜன., 5 ம் தேதி பகல் பத்து உற்சவமும், 6ம் தேதி முதல் ராப்பத்து திருவாய்மொழி உற்சவம் துவங்குகிறது.