பதிவு செய்த நாள்
19
டிச
2019
12:12
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மார்கழி மாதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
மேலும், பக்தர்கள், அதிகாலை நேரத்தில், பஜனை பாடல்களை பாடியபடி கோவிலுக்கு திருவீதி உலா சென்றனர்.ஒரு நாளுக்கு அதிகாலை நேரம் இருப்பது போல, இந்து மத நம்பிக்கையின் படி, ஒரு ஆண்டின் அதிகாலைப் பொழுதாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. குளிர் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலை நேரத்தில் எழுந்து, நீராடி, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை மனமுருக இசைத்து இறைவனை வழிபடுவது வழக்கம்.
குறிப்பாக, மார்கழி மாதம் என்றாலே, பக்தர்கள் குழுக்களாக வீதிகளில் பக்தி பாடல்களை இசைத்தபடி உலா வருகின்றனர்.பொள்ளாச்சியில், மார்கழி மாத அதிகாலை பஜனை பல்வேறு வைணவ கோவில்களில் நடக்கிறது. பெரும்பாலான கோவில்களில் மார்கழி சிறப்பு வழிபாடு நடக்கிறது.கரிவரதராஜப்பெருமாள் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், அதிகாலை பஜனை மற்றும் திருவீதியுலா நடக்கிறது.
பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோவில் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், ஐயப்பன் கோவில் மற்றும் ஆனைமலை ரங்கநாதர் கோவில் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.பொள்ளாச்சி பாலக்காடு ரோடு, லட்சுமி நரசிம்மர் கோவில் அர்ச்கர்கள் தலைமையில், அதிகாலையில் மார்கழி மாத சிறப்பு நாமசங்கீர்த்தன திருவீதியுலா சென்றனர். கோவிலில், சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது.