நெல்கட்டும்செவல் கோயிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2012 11:04
சிவகிரி : நெல்கட்டும்செவல் உச்சினி மாகாளியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. பொதுமக்களின் ஒரு தரப்பினர் கோயிலில் குடியேறி நடத்தி வந்த போராட்டம் பேச்சுவார்த்தையில் வாபஸ் பெறப்பட்டது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ளது நெல்கட்டும்செவல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள உச்சினி மாகாளியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பூக்குழி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அப்போது நெல்கட்டும்செவல் ஜமீன் வாரிசுதாரர்களை மேளதாளம் முழங்க அழைத்து வந்து முதல் மரியாதை செய்வது வழக்கம். இதற்கு நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் வழக்கம் போல் நடைமுறையை கோயில் விழாவில் பின்பற்ற வேண்டுமென்று கூறி வருகின்றனர். இதனால் இரு தரப்பினரையும் அழைத்து தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இருதரப்பினரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். பேச்சுவார்த்தை முடிவில் சித்திரை பூக்குழி திருவிழாவில் வழக்கமான நடைமுறையை பின்பற்ற வேண்டுமென்று உத்தரவிட்டார். ஒரு தரப்பினர் வழக்கமான நடைமுறையை பின்பற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். இந்நிலையில் 2 நாட்களாக நீடித்து வந்த பொதுமக்களின் ஒரு தரப்பினரின் கோயிலில் குடியேறி நடத்தி வந்த போராட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்தது. பேச்சுவார்த்தை முடிவில் வரும் ஆடிமாத திருவிழாவை தனிப்பட்ட நபர்களின் தலைமையில்லாமல் அரசு அலுவலக முன்னிலையில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் சிவகிரி தாசில்தார் கஸ்தூரி, விஏஓ வைதேகி, புளியங்குடி டிஎஸ்பி ஜமீம், வாசு., இன்ஸ்பெக்டர் சண்முகவேல், வாசு., ஒன்றிய கவுன்சிலர் பாண்டியராஜா, பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டித்துரை கலந்து கொண்டனர். பின் நள்ளிரவு அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து நேற்று நெல்கட்டும்செவல் உச்சினி மாகாளியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் ஜமீன் வாரிசுதாரர்களான கோமதி முத்துராணியை மக்கள் தரப்பினர், பூக்குழி விழா கமிட்டியினர் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க ஜமீன் வாரிசுதாரர் இடத்திற்கு சென்று அழைத்து வந்து முதல் மரியாதை செய்யப்பட்டது. பின் காலை 8.15 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. பால், தயிர், மஞ்சள் உட்பட 11 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஜமீன் வாரிசுதாரரான கோமதி முத்துராணி, ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.