பதிவு செய்த நாள்
23
ஏப்
2012
11:04
செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. மகாலட்சுமி அருள் இருந்தால் குப்பை மேட்டில் வசிப்பவனும் கோடீஸ்வரன் (குபேரன்) ஆகிவிடலாம். மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், பூரணகும்பம், சந்தனம், மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கல பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். மேலும் வில்வ மரம், நெல்லி மரம், துளசி செடி ஆகியவற்றில் வாசம் செய்கிறாள். லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்தும் பூஜிக்கலாம். அவ்வாறு அர்ச்சிக்கும் போது வில்வத்தை தளப்பக்கமாக பூஜிக்க வேண்டும். ஏனென்றால் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள். வாமன புராணத்தில் மகாலட்சுமி திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சகம் தோன்றியது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணத் தகவல்.
வில்வமரம் போன்று நெல்லி மரமும் திருமாலின் திருவருளை பெற்றது. இதனால் நெல்லி மரத்தை ஹரிபலம் என்றும் சொல்வார்கள். நெல்லிக்கனி இருக்கும் இடத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம். அட்சய திருதியை அன்று அதிகாலை எழுந்து நீராடி சூரியன் உதயமாதவற்கு முன்னாள் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். வீட்டின் முன் பக்கம் மாக்கோலம் போட வேண்டும். பூஜையில் வைத்து வணங்க ஒரு கிராம் தங்கமாவது கடன்பட்டு வாங்கணும் என்பார்கள் முன்னோர்கள். ஆதலால் தங்க நகை கடையில் கூட்டம் அலைமோதி காணப்படும். ஆனால் அட்சய திருதியை பற்றி அப்படி ஒரு புராண நூலிலும் கூறப்படாவிட்டாலும் பிரம்ம தேவர்தன் படைக்கும் தொழிலை தொடங்கியது இந்நாளில் தான். மிகவும் புண்ணியமான இந்த நாளில் புனித நீராடுவது, முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது, பசு, பால், தயிர், மோர், செருப்பு, குடை ஆகியவற்றை தானம் வழங்குவது அழியாத பலனை தரும். தங்கம் வாங்க முடியாதவர்கள் அரிசி, வெல்லம் அல்லது நெல்லிக்கனி வாங்கி பூஜை அறையில் வைத்து வணங்குங்கள். அட்சய திருதியை நாளில் அன்னையின் அருள் கிட்டும். ஐஸ்வர்யங்கள் பல பெருகட்டுமே! —கே.செல்லப்பெருமாள்.