பதிவு செய்த நாள்
19
டிச
2019
01:12
மேட்டுப்பாளையம் : மார்கழி மாதத்தை முன்னிட்டு, காரமடையில், நான்கு பஜனை குழு வினர், வீதிகளில் திருப்பாவை பாடி வந்தனர்.
மார்கழி மாதம் விடியற்காலையில் அந்தந்த ஊர்களில் உள்ள பஜனை குழுவினர், கோவில்கள் மற்றும் கிராமங்களைச் சுற்றி பஜை பாடல்கள் பாடி வருவது வழக்கம். கோவை மாவட்டத் தில் வைணவ கோவில்களில் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இங்கு மார்கழி மாதம், 30 நாட்களும் நகரில் பஜனை குழுவினர் பாடல்கள் பாடி வருவது வழக்கம்.
மார்கழி மாதம் துவங்கியதை அடுத்து அதிகாலை, தாசபளஞ்சிக மகாஜன திருப்பாவை பஜனை வழிபாட்டுக்குழுவினர், திரு முருக வழிபாட்டு குழுவினர், சந்தான வேணுகோபால சுவாமி பஜனை வழிபாட்டு குழுவினர், ஐயப்ப பக்தர்கள் பஜனைக் குழுவினர் ஆகிய நான்கு குழுவினர் தனித்தனியாக, தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில், பக்தி பாடல்கள் பாடி ஊர்வலமாக அரங்கநாதர் கோவிலுக்கு வந்தனர். அந்தந்த வீதிகளில் உள்ளவர்கள், வீதியில் கோலம் போட்டு, குத்து விளக்கு ஏற்றி வைத்து, பஜனை குழுவினரை வரவேற்றனர்.
பஜனை குழுவினர் கோவிலில் சிறிது நேரம் பஜனை பாடிய பிறகு, அரங்கநாதப் பெருமாளை வழிபட்ட பின்பு கலைந்து சென்றனர். இந்நிகழ்ச்சியில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.