அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2019 12:12
புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 9ல் தீர்ப்பளித்தது.சர்ச்சைக்குரிய நிலத்தில் ஹிந்து கடவுள் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும். கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு மூன்று மாதத்துக்குள் அமைக்க வேண்டும். அயோத்தியில் முக்கியமான இடத்தில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.இது பற்றி உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ள காலகெடுவுக்குள் அமைக்கப்பட்டு விடும். இதில் உறுப்பினர்களாக யார் யாரை நியமிப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்ப்டடு வருகிறது என்றார். பா.ஜ. தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சமீபத்தில் கூறுகையில் அயோத்தி அறக்கட்டளையில் பா.ஜ.வை சேர்ந்த ஒருவர் கூட இடம் பெற மாட்டார்கள். கோவில் கட்ட அரசு செலவு செய்யாது. மக்களிடம் வசூல் செய்து கோவிலை அறக்கட்டளை கட்டும் என்றார்.