பதிவு செய்த நாள்
22
டிச
2019
08:12
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி ஐயப்பன் கோவிலில், 18ம் படி திறப்பு விழா, நேற்று நடந்தது. ஆண், பெண் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், படியேறி ஐயப்பனை தரிசனம் செய்தனர். புன்செய்புளியம்பட்டி நேருநகரில், சித்தி விநாயகர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. சபரிமலையில் உள்ளது போல், 18 படிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை, 18ம் படி திறக்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு நிகழ்வு நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமத்துடன் ஐயப்பனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் மற்றும் விசேஷ பூஜை நடந்தது. காலை, 6:30 மணிக்கு குருசாமி முன்னிலையில், 18ம் படி திறக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள், சரண கோஷத்தோடு, படியேறி வணங்கினர். ஆண்கள் மட்டுமின்றி, பெண்கள் மற்றும் குழந்தைகளும் படியேறி ஐயப்பனை தரிசித்தனர். தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பனுக்கு அலங்கார பூஜை நடந்தது. இரவில், 18 படிகளை மலர்களால் அலங்கரித்து, குத்து விளக்குகள் ஏற்றி, படி பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன், 18ம் படி நடை அடைக்கப்பட்டது.