பதிவு செய்த நாள்
25
டிச
2019
12:12
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நாளை மார்கழி மாத, 10ம் நாள் வழிபாடாக, நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்... என்ற பாடலை, பக்தர்கள் பாடுகின்றனர்.
கோவிலின் சிறப்பு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள, கரிவரதராஜ பெருமாள் கோவில், பழம்பெருமை மிக்கது. இங்கு மார்கழி மாதம், 30 நாட்களும் அதிகாலை திருப்பாவை பாடும் பக்தர்களை தொடர்ந்து, பாகவத கோஷ்டியினரின், சிறப்பு பஜனை நடந்து வருகிறது. அதிகாலையில், பஜனை கோஷ்டியினர் வீதிதோறும் வலம் வருவது, கண்கொள்ளக்காட்சி. இக்கோவிலில் நாளை திருப்பாவையின், 10ம் பாடலான, நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்... என்ற பாடலை, பக்தர்கள் பாடுகின்றனர்.
பாடலின் பொருள்
நோன்பிருந்து, பகவானையே பற்றாகக் கொண்டு, பிற செயல்களை விடுத்து பரவசத்தில் மூழ்கியிருக்கும் பெண்ணே! கதவைத்தான் திறக்கவில்லை என்றாலும், மறுமொழியாவது கூறக்கூடாதா? மணமிக்க திருத்துழாய் மாலை அணிந்த நாராயணன், நம் நோன்புக்கு வேண்டிய அருளைத் தரக்கூடிய புண்ணிய மூர்த்தியாவான். முன்பு எமன் வாயில் வீழ்ந்த, கும்பகர்ணன் தோற்றுப்போய், தனது துாக்கத்தை, உனக்குக் கொடுத்து விட்டுப்போய் விட்டானோ! சோம்பல் உடையவளே! அருங்கலமே! தெளிவுடன் வந்து கதவைத் திற.