திருவருட்பிரகாச வள்ளலார் இறைவனிடம் ஒன்பது பேறுகளை வேண்டுகிறார். ஈயென்று (கொடு என்று) நான் ஒருவரிடம் நின்று கேளாத இயல்பு; என்னிடம் ஒருவர் கொடு என்றபோது அதற்கு இல்லை என்று சொல்லாமல் இடுகின்ற திறம்; இறையாய் நீ என்றும் எனை விடா நிலை; என்றும் உன் நினைவை விடாத நெறி; அயலார் நிதியை என்றும் விரும்பாத மனம்; மெய்ந்நிலை என்றும் நெகிழாத திடம்; உலகில் சீ என்றும் பேய் என்றும் நாய் என்றும் பிறர்தமை தீங்கு செய்யாத தெளிவு; திறம் ஒன்று வாய்மை (வாய்மையே மேன்மை என்ற எண்ணம்); தூய்மை...ஆகிய ஒன்பது பேறுகளையும் தந்து, உமது திருவடிக்கு ஆளாக்குவாய் என்று அவர் இறைவனை வேண்டும் அந்தப் பாடல்...
ஈஎன்று நான் ஒருவரிடம் நின்று கேளாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈது இடு என்ற போது அவர்க்கு இலைஎன்று சொல்லாமல் இடு கின்ற திறமும் இறையாம் நீ என்றும் எனைவிடா நிலையும் நான் என்றும் உள் நினைவிடா நெறியும் அயலார் நிதியொன்றும் நயவாத மனமும் மெய்ந் நிலையென்றும் நெகிழாத திடமும் உலகில் சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்தமைத் தீங்கு சொல் லாத தெளிவும் திறம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின் திருவடிக்கு ஆளாக்கு வாய் தாய் ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள் வளர் தலம் ஓங்கு கந்த வேளே! தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே!
இது, திருவருட்பா - தெய்வமணி மாலையில் 9-வது பாடலாக அமைந்திருப்பது சிறப்பு!