பதிவு செய்த நாள்
24
ஏப்
2012
05:04
துறவி ஒருவர், கிடைத்ததை சாப்பிடுவதையும், எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவதையும் கண்ட அவரது சீடன், சுவாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்? என்று தனது சந்தேகத்தை அவரிடம் கேட்டான். குருவே துறவியாக இருந்துகொண்டு, நீங்கள் இப்படி எல்லாவற்றிலும் ஈடுபடுவது சரிதானா? உங்கள் மனம் அதனால் பாதிக்கப்படாதா? அவனுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் ஒரு குளக்கரைக்கு அழைத்துப் போனார் துறவி. கரையிலேயே இருவரும் நின்றனர். கொஞ்சநேரத்திற்குப் பிறகு, அந்தப் பக்கமாக சில நாரைகள் பறந்து வந்தன. துறவி அந்த நாரைகளை சீடனுக்குக் காட்டினார். பின்னர் அவற்றின் நிழல் குளத்து நீரில் விழுவதையும் பார்க்கச் சொன்னார். பறவைகள் அந்த இடத்தைக் கடந்த பின் கேட்டார், கொஞ்சம்நேரம் முன்பு பறவைகளுக்கும் குளத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா, இல்லையா?
இருந்தது... அவற்றின் நிழல் குளத்தில் விழுந்தது?
இப்போது
இல்லை குருவே...!
அவற்றின் நிழல் விழுந்ததால் குளத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா?
ஊஹூம்..!
அதனால் அந்தப் பறவைகளும் ஏதாவது பாதிப்பு வந்ததா?
கிடையாது..!
அப்படியானால் இப்படி ஒரு விஷயம் நடப்பதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?
நாம் இந்த உலகில் வாழ்ந்து அனைவரிடமும் சமமாக பழகினாலும், நாரையின் நிழல் குளத்தில் விழுந்ததை போல எதிலும் தொடர்பில்லாமல் வாழ வேண்டும் என்று குரு கூற சீடன் உண்மையை புரிந்து கொண்டான்.