பதிவு செய்த நாள்
29
டிச
2019
04:12
கோவை, பாப்பநாயக்கன் பாளையம், சித்தாபுதுார் அருகே அமைந்துள்ள ஜெகனாதப்பெருமாள் கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு மார்கழி மாதத்தை ஒட்டி, ஆண்டாள் நமக்கு அருளிய திருப்பாவையின், 14ம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.
சித்தாபுதுார் ஜெகனாதப்பெருமாள் கோவில் நுாற்றாண்டு பழமையானது. இக்கோவிலில் வீற்றிருக்கும் ஜெகனாதப்பெருமாளுக்கு மங்கலப்பொருட்கள், மலர்மாலை சமர்ப்பித்து வழிபாடு செய்தால் திருமண வேண்டுதல் நிறைவேறும். இளம்வயதினர் மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்தால், விரைவாக திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.இதற்காகவே கோவில் வளாகத்தில் ஸ்ரீரங்கமண்டபம் கட்டப்பட்டுள்ளது. வேண்டுதல் நிறைவேறுவோர் இங்கேயே திருமணத்தை நடத்தி, வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மார்கழி மாதத்தை ஒட்டி, இக்கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு, உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்... என துவங்கும் திருப்பாவை பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்:உங்கள் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் குவளை மலர்கள் மலர்ந்து, ஆம்பல் மலர்கள் கூம்பின. வெண்ணிற பற்களை கொண்ட, காவி ஆடை அணிந்த துறவிகள் தத்தம் திருக்கோவில்களில் சங்கை ஊதி அன்றாட பூஜையை துவக்க உள்ளனர். எங்களை வந்து எழுப்புவேன் என்று சொல்லி மறந்து போன பெண்ணே; சொன்ன சொல்லை காப்பாற்றாமல் விட்டோமே என்ற நாணமும் இல்லாதவளே, அழகாக மட்டும் பேசுபவளே. செந்தாமரை போன்ற அழகிய முகத்தையும், உருண்டையான கண்களையும், அகன்ற தோள்களில் சங்கு சக்கரத்தை ஏந்தியவனுமான ஸ்ரீமந்நாராயணனை பாட எழுந்துவா, என்கின்றனர் பெண்கள்.-இதுவே இப்பாடலின் பொருள்.