திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவ விழா நடந்தது.
நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் முதல் பத்து நாட்கள் கொண்டாடப்படும் பகல்பத்து உற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று மாலை 4:00 மணிக்கு தேகளீச பெருமாள் ஆண்டாள் கொண்டை சூடி சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி பாண்டிய மண்டபத்தில் எழுந்தருளி திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாசுரங்கள் பாடப்பட்டு சாற்றுமறை நடந்தது. ஆலய பிரதட்சணமாக பெருமாள் மூன்றுமுறை வலம் வந்து, சன்னதியை அடைந்தார்.ஜீயர் ஸ்ரீசீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜனவரி 6ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.