பதிவு செய்த நாள்
30
டிச
2019
02:12
லண்டன்: லண்டனில் டிசம்பர் 23ம் தேதி சைவ ஆகம ஆய்வரங்கமும் ,ரௌரவ ஆகம புஸ்தக வெளியீடும் நடந்தது. லண்டன் முருகன் கோவிலில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கோவிலின் தலைமை குருக்களும் ஐரோப்பா முழுதும் புகழ்பெற்றவருமான திரு நாகநாத சிவம் தலைமை தாங்கினார்.
வேத ஆகம அகாடமி நிறுவனரும், உலக இந்து மகா சங்க ட்ரஸ்டியுமான திரு.கல்யாண சுந்தர குருக்கள் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியின் முக்கியத்வத்தை விளக்கினார். அண்மையில் சென்னையில் காஞ்சி சங்கராச் சார்ய சுவாமிகளைச் சந்தித்தபோது வெளிநாடு வாழ் குழந்தைகளுக்கு வேதம் , புராண, இதிஹாசம் ஆகியவற்றோடு நல்ல கடவுள் துதிகளைக் சொல்லித் தரும்படி சொன்னதாகவும் அதை அகாடமி செய்து வருவதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ கல்பகா, வேதாகம அகாடமி, சைவ வேதாகம ட்ரஸ்ட், உலக இந்து மகா சங்கம் இணைந்து நடத்தின. திருமதிகள் கீதா கல்யாண சுந்தரம், ஸ்ரீதேவி சந்திரசேகரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தனர். அகாடமியில் வேதம் பயிலும் மாணவர்கள் இறைவணக்கம் பாடினர். தலைமை உரையில் திரு நாகநாத சிவம் பல சுவையான சம்பவங்களை எடுத்துரைத்தார்.
திரு. கல்யாண சுந்தர குருக்கள் நன்றி உரையில் 28 ஆகமங்களின் சிறப்பு 18 பத்ததிகளின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லி, இது போன்ற கருத்தரங்குகளுக்கு ஆதரவு பெருகிவருகிறது என்றார். சிறுவர்கள் அதிக ஈடுபாட்டுடன் துதிகளைக் கற்பதை பாராட்டினார். வந்திருந்த சிவாச்சாரியார்கள் அனைவருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கி பொன்னாடை போர்த்துவித்தார். லம்போதர குருக்கள், கோபி குருக்கள் முதலானோர் அவருக்கு உறுதுணையாக நின்று நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். ரௌரவ ஆகம நூல் வெளியீட்டுடன் விழா நிறைவு பெற்றது.