பதிவு செய்த நாள்
01
ஜன
2020
10:01
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த திருப்படித் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், திருப்படித் திருவிழாவையொட்டி, காலை, 7:45 மணிக்கு, சரவண பொய்கை அருகில் உள்ள மலையடிவாரத்தில், கோவில் இணை ஆணையர் பழனிகுமார், திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், ஆவின் சேர்மன் சந்திரன் ஆகியோர் முதல் பஜனை குழுவினரை வரவேற்றும், முதல்படியில் பூஜை செய்தும், படித் திருவிழாவை துவக்கி வைத்தனர்.365 படிகள்பின் கோவில் ஊழியர்கள், 365 படிகளிலும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து மலைக்கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக் கணக்கான பஜனை கோஷ்டியினர், ஒவ்வொரு படியிலும், பக்தி பாடல்கள் பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர்.மேலும், படித் திருவிழாவையொட்டி, திரளான பெண் பக்தர்கள் ஒவ்வொரு படியில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி மலைக்கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசித்தனர்.
வெள்ளி மயில் வாகனம்தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முன்னதாக, அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும், வள்ளிமலை சுவாமி சச்சிதானந்தா திருப்புகழ் சபா குழுவின், 102வது படித் திருவிழாவையொட்டி, நகரத்தார் மண்டபத்தில் அன்னதானம் மற்றும் பக்தி கச்சேரி நடந்தது. நள்ளிரவு, 12:01க்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பல மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.