பதிவு செய்த நாள்
01
ஜன
2020
11:01
மலுமிச்சம்பட்டியில் கிழக்கு பார்த்து அமைந்துள்ள நவகோடி நாராயண பெருமாள் கோவிலில், நாளை காலை 5:00 மணிக்கு, திருப்பாவையின் பதினேழாம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.கோவிலின் சிறப்புமலுமிச்சம்பட்டி நவகோடி நாராயண பெருமாள் கோவில் மிகவும் பழமையானது.
வைணவ ஆச்சார்யரான ராமானுஜரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில். நவக்கிரஹ தோஷம் நிவர்த்தியாகும் என்று, ராமானுஜரால் முன்மொழியப்பட்ட கோவில். இங்கு நவக்கிரஹ சாந்தி செய்து கொண்டால், மகாலட்சுமி கடாக்ஷமும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.மார்கழி மாதத்தையொட்டி, இக்கோவிலில் நாளை காலை 5:00 மணிக்கு, அம்பரமே தண்ணீரே, சோறே அறம் செய்யும் என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.
பாடலின் பொருள் உண்ண உணவும், பருக நீரும், உடுக்க உடையும், வேண்டும் அளவு தருமம் செய்து வாழ்கின்ற இடைக்குலத் தலைவனான நந்தகோபாலா, துயில் நீங்கி எழுந்திடு. துன்பம் அறியாத கொடி போன்று வளர்ந்து நிற்கும் எங்களுக்கு, கொழுந்து போன்ற தலைவி யசோதையே நீயும் துயில் நீங்கி எழுந்திரு.ஓங்கி மூவுலகங்களையும் அளந்து ஆகாயம் முழுவதும் நிறைத்து நின்ற பாதங்களை உடையவனே. தேவர்களுக்கெல்லாம் தலைவனான தேவாதி தேவனே. துயில் நீங்கி எழுந்தருள்வாயாக. செம்பொன்னால் செய்த கழல் என்னும் ஆபரணத்தை, காலில் அணிந்த பலதேவா, நீயும் உன் தம்பியும் உறங்காது எழுந்து பாருங்கள் என அழைத்துப் பாடுகின்றனர் பெண்கள் என்பதே இப்பாடலின் பொருள்.