பதிவு செய்த நாள்
01
ஜன
2020
01:01
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேரோட்டம் நடக்கிறது.
இந்த ஆண்டு தேர்த்திருவிழாவில் நேற்று முன்தினம் காலையில், கிராம தேவதை வழிபாடும், இரவு கிராம சாந்தியும் நடந்தன. நேற்று அதிகாலையில் கணபதி வேள்வி நடந்தது. இதைடுத்து கொடியேற்றம் நடந்தது, பின்னர் கயிலை வாத்தியத்துடன், பெண்கள் கும்மியுடன் சுவாமி திருவீதியுலா துவங்கியது. ஓதிமலை ரோடு, தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு வழியாக மதியம் மீண்டும் கோவிலை அடைந்தது. உலாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று காலை சூரிய வாகனத்திலும், மாலையில் சந்திர வாகனத்திலும், சுவாமி திருவீதியுலா நடக்கிறது. நாளை மாலை பூத வாகனத்திலும், 3ம் தேதி மாலையில் புஷ்ப பல்லக்கிலும் உலா நடக்கிறது. 5ம் தேதி காலையில் திருக்கல்யாண உற்சவமும், மாலையில் சொற்பொழிவும் நடக்கிறது.தேரோட்டம் வரும், 6ம் தேதி, காலை 10:30 மணிக்கு துவங்கி நடக்கிறது. மடாதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.